Tamilnadu

தமிழ்நாட்டு வீரர் அ.மஹாராஜனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் உயரிய ஊக்கத்தொகை வழங்கி வருகின்றார்கள்.

மேலும் உலகின் எப்பகுதியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்தி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை வாங்கி கொள்ளவும்;

தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கான செலவு, தங்குமிடம், பயிற்சி பெறுதல்,  பயணத்திற்கான செலவுகளை மேற்கொள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (5.11.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பஹ்ரைனில் சமீபத்தில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் திரு.அ.மஹாராஜனுக்கு 25.00 லட்சம் ரூபாய்க்கான  ஊக்கத்தொகை காசோலையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அபுதாபியில் 21.11.2025 முதல் 30.11.2025 வரை நடைபெறும் உலக சீனியர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும்  11 வீரர், வீராங்கனைகளுக்கு போட்டியில் பங்கேற்க, பயணச்செலவு, தங்குமிட செலவு உள்ளிட்ட செலவீனத்திற்காக தலா 1,75,000 ரூபாய் வீதம் மொத்தம் 19.25 லட்சம் ரூபாய்க்கான காசேலைகளை வழங்கினார். 

தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியைச் சேர்ந்த 5 கூடைப்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கிட மொத்தம் 2.75 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்,  உலக திறன் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பாரா வாள்வீச்சு வீராங்கனை செல்வி ஷெரந்தி தாமஸ்க்கு செலவீன தொகையாக 1,64,500 ரூபாய்கான காசோலையும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து வழங்கினார். 

 தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் (TN Champions Foundation)  மூலமாக இதுவரை 481 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் உட்பட 4,082 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும், உயர்தர விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் 36,00,58,551 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Also Read: Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!