Tamilnadu

திராவிட மாடலில் உழவர்கள் பெற்ற நலன்! : வேளாண் திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாகப் பெய்துவருகிறது. சம்பா/தாளடி/பிசானம் பருவ நெல் சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழ்நிலையில்,  22.10.2025 தேதிவரை வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் இயல்பு மழையை விட 82 சதவீதம் கூடுதலாகவும், இராணிப்பேட்டை, திருநெல்வேலி, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இயல்பு மழையை விட 100 சதவீதத்திற்கும் அதிகமாவும் பெய்துவருகிறது.   

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு  நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (22.10.2025) தலைமைச்செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

ஆய்வுக்கூட்டத்திற்கு முன்னதாக, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும்  நெல் கொள்முதல் குறித்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். 

தமிழ்நாட்டில், இதுவரை 21 இலட்சம் எக்டரில் நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகள், பருத்தி,கரும்பு,  ஆகிய பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இதில் கார்/குறுவை/சொர்ணவாரி பருவத்தில் 5 இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்ட  நெற்பயிரில் 3.60  இலட்சம் எக்டர் அறுவடை செய்யப்பட்டதுடன், மீதமுள்ள 1.40 இலட்சம் எக்டரில் அறுவடைப்பணிகள் அக்டோபர் இறுதிக்குள் முடிவுறும் என்றும்;

தோட்டக்கலைப்பயிர்களில் இதுவரை 13.46 இலட்சம் எக்டர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 77 சதவீதம் சாதனை அடையப்பட்டுள்ளது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இத்துறையின் மீது தனிக்கவனம் செலுத்தி துரிதமான நடவடிக்கைகள் மூலம் எல்லோராலும் பாராட்டக்கூடிய துறையாக மாற்றியுள்ளார் என்று  வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.  

சம்பா/தாளடி/பிசானம் மற்றும் இராபி பருவத்திற்குத் தேவையான விதைகள், மறுநடவுக்குத் தேவையான குறுகியகால மற்றும் மத்தியகால நெல் இரகங்கள், தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை   இருப்பு வைத்து தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும், மாதாந்திர விநியோகத் திட்டத்தின்படி உரவிநியோகம் செய்யப்படுவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.  

பருவமழை தீவிரமடைந்து வருவதால், வானிலை சார்ந்த பயிர் ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகள் அனைத்து சமூக, பொது ஊடகங்கள் வாயிலாக முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும்,  பயிர் சேதங்களை கண்காணித்திட மாவட்ட மற்றும் வட்டார அளவில்  கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு நீரில் மூழ்கிய பயிர்களில் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் சேதம் ஏற்படும் பட்சத்தில், வேளாண்மை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து பயிர் சேதப் பரப்பினை கூட்டுக்கணக்கெடுப்பு செய்து;

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் வாயிலாக கருத்துரு அனுப்பிட உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பயிர்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பதிவு செய்திட களப்பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். 

பேரிடர் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள, வேளாண்மைப் பொறியியல் துறையின் வாயிலாக 805 மரம் அறுக்கும் கருவிகள், 21 டிராக்டரால் இயங்கக்கூடிய நீர் இறைக்கும் பம்புகள், 80 சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் 64 டிராக்டரால் இயங்கக்கூடிய டிப்பிங் டிரைலர்கள் ஆகிய இயந்திரங்கள் பழுதுநீக்கம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன என்றும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக  1.63 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 148 சேமிப்புக் கிடங்குகள் தயார்நிலையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

பூச்சி, நோய்த் தாக்குதலை தொடர்ந்து கண்காணித்து, பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள துறையின் அலுவலர்கள் மூலம் அறிவுரை வழங்கிடவும், காற்றின் வேகத்திலிருந்து பாதுகாத்திட,  தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்லாண்டுப் பயிர்களில் கவாத்து செய்தல், வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுத்தல் போன்ற பணிகளையும் மேலும் வேளாண்மை – தோட்டக்கலை பயிர்களுக்கும் காலநிலை மாற்றம் மூலம் பருவ மழையை கணக்கில் கொண்டு பயிர் சாகுபடியை திட்டமிட்டு சாகுபடி செய்திட வேண்டும் என்றும் மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார். 

தேர்தல் வாக்குறுதியின்படி, நெல்லுக்கான ஊக்கத்தொகை ஆண்டுதோறும் படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில்,  2025-26ஆம் ஆண்டில்  குவிண்டால் ஒன்றுக்கு  சாதாரண இரகத்திற்கு 131 ரூபாயும், சன்ன இரகத்திற்கு 156 ரூபாயும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் வழங்கப்பட்டு, சாதாரண இரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயும், சன்ன இரகத்திற்கு 2,545 ரூபாயும் கொள்முதல் விலையாகப் பெற்று 10 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுகிறார்கள் என்றும்;

வானிலையினை கருத்திற்கொண்டு இந்த அரசு பொறுப்பேற்றவுடன், வழக்கமாக அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல், 2022ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது என்றும்,          2019-20ஆம் ஆண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக 32 இலட்சத்து 41ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், படிப்படியாக நெல் கொள்முதல் உயர்ந்ததுடன் கடந்த பத்தாண்டுகளில், 2024-25 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 48 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது என்றும்;

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் செப்டம்பர் மாதம் துவங்கிய கொள்முதலில் இதுவரை,  நடப்பாண்டில் அதிக அளவாக 9.67 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். 

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், தமிழ்நாடு முழுவதும்,  இதுவரை 808 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டு ஆக மொத்தம் 1,819 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவருவதுடன், நாள்தோறும் கொள்முதல் நேரம் மாலை 6 மணி வரை இருந்த நிலையில் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், நெல் கொள்முதலுக்காக டெல்டா மாவட்டங்களில் 58 இலட்சம் சாக்குப்பைகளும், 58 மெட்ரிக் டன் சணல்களும், 29 ஆயிரம் பிளாஸ்டிக் தார்பாய்களும் தயாராக உள்ளதாகவும், மாநில அளவில் 2.65 கோடி சாக்குப்பைகள் இருப்பில் உள்ளன என்றும்;

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகள் மட்டுமல்லாது கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கிடங்குகளிலும்,  ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலுள்ள சேமிப்புக்கிடங்குகளிலும்  பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படுகின்றன என்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவினை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரித்திட தமிழ்நாடு  அரசால், ஒன்றிய அரசிற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும்,  அதிக நெல் வரத்து இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன என்றும் தெரிவித்தார். 

2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகாலத்தில்,  இரண்டு இலட்சத்து 21 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன என்றும், 2021 முதல் 2025 வரையிலான நான்காண்டு காலத்தில் இரண்டு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டு, இதுவரை ஒரு இலட்சத்து 84 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதனால் மொத்த பாசனப் பரப்பு 2020-21ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் 2024-25ஆம் ஆண்டில் 8.60 இலட்சம்  ஏக்கர் கூடுதலாக அடையப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். 

இவ்வாறு தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீரிய நடவடிக்கைகளால், 2023-24ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின்  மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், வேளாண்மைத்துறையின் பங்கு  ஒரு இலட்சத்து 50 ஆயிரம்  கோடி ரூபாய் என்றும்,   இது தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் மற்றும் அகில இந்திய அளவில் வேளாண்மைத்துறையின் பங்கான3.82 சதவீதத்தை விடக் கூடுதலாகும் என்றும்;

அதிமுக ஆட்சிகாலத்தில் 2012-13 முதல் 2020-21 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, இவ்வரசின் பல்வேறு திட்ட முன்னேற்பாடுகளால் 2021-22முதல் 2022-24 வரை 5.66 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். 

தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கணக்கெடுக்கப்படும் பயிர் பாதிப்பு, விதை,  உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள்  இருப்பு  மற்றும் சம்பா நெற்பயிருக்கான பயிர்க்காப்பீடு குறித்து மாவட்ட வேளாண்மை இணைஇயக்குநர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தின் முடிவில், அனைத்து அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்றுமாறும், விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்திடவும், பயிர் வாரியான வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த  ஆலோசனைகள் வழங்கிடுமாறும் அறிவுறுத்தியதுடன் இது குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் பத்திரிக்கை செய்தி வாயிலாக விவசாயிகளுக்குத் தெரிவித்திடவும் கேட்டுக்கொண்டார்.  

மேலும், அந்தந்த பகுதியுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி துறையால் எடுக்கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைக்குமாறும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துறையின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைப்புடனும், முனைப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Also Read: “பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்” -சேந்தமங்கலம் திமுக MLA மறைவுக்கு முதல்வர் இரங்கல்!