Tamilnadu
சுற்றுலாத் தலங்களில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.10.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம்- ஜவ்வாது மலை, கரூர் மாவட்டம் - பொன்னணியாறு அணை மற்றும் நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை ஆகிய இடங்களில் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் 7.46 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை திறந்து வைத்து, 16.30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலாத் தலங்கள், பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
திறந்து வைக்கப்பட்ட 4 முடிவுற்ற திட்டப்பணிகள்
தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நோக்கில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் 2 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம், நடைபாதை, வாகன நிறுத்துமிடம், முகப்பு வளைவு, உணவகம், சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள், தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் புதிய காட்சிமுனைகள் அமைக்கப்படுவதை தொடர்ந்து, ஜவ்வாது மலை சுற்றுச்சூழல் பூங்கா பகுதியில் 49 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய காட்சிமுனை மற்றும் தள மேம்பாட்டுப் பணிகள்;
கரூர் மாவட்டத்தில் உள்ள பொன்னணியாறு அணையில் 2 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட படகுத்துறை பணிகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பணிகள்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம்;
என மொத்தம் 7 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 4 சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட 5 புதிய திட்டப்பணிகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் அமைந்துள்ள புங்கனூர் ஏரியில் 87 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படகு குழாம், நுழைவு வளாகம், தள மேம்பாடு மற்றும் மின் வசதிகள் உள்ளிட்ட பணிகள்;
திண்டுக்கல் மாவட்டம், புல்லாவெளி அருவி மற்றும் ஒட்டன்சத்திரம்-இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைப்பகுதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலை அருவி ஆகியவற்றில் 5.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார வளாகம், நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா, குடிநீர் வசதி, வழிகாட்டுப்பலகைகள் மற்றும் மின் வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள்;
இராமேஸ்வரத்தில் 9 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டல் தமிழ்நாடுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடனான கட்டுமானப் பணிகள்;
என மொத்தம் 16 கோடி 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்