Tamilnadu

பட்டியலின இளைஞர் கொலை : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ்!

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில், பட்டியலின இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவு தலைவர் ராஜிந்தர் பால் கவுதம், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், கடந்த பத்து ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில், தலித்துக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பல மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினர். உத்தரப்பிரதேசம் உள்பட பாஜக ஆளும் 5 மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் 75 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளை சுட்டிக்காட்டிய அவர்கள், இதில், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 26.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டனர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில், அ ம்மாநில அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர்கள், தலித்துகள், பெண்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி உத்தரப்பிரதேச மாநிலத்தில் புல்டோசர் கலாச்சாரம் நீடித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Also Read: ”தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” : ஆர்.என்.ரவி கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த முரசொலி!