Tamilnadu

“AeroDefCon 2025” - மூன்று நாள் சர்வதேச மாநாடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.10.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற டிட்கோ, BCI ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான “AeroDefCon 2025” என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்தார். 

இம்மாநாடு, அக்டோபர் 7 முதல் 9 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும்.  இம்மாநாடு தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சூழலுடன் இத்துறை சார்ந்த சர்வதேச நிறுவனங்களை இணைக்கும் முக்கிய தளமாக விளங்கும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு தொழில்துறை வழிதடத் திட்டம், இத்துறையில் சர்வதேச அளவில் கூட்டு திட்டங்கள், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும். தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தட திட்டம் செயல்படுத்தத் தொடங்கியதிலிருந்து இதுவரை 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, இதில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. 2032-ஆம் ஆண்டிற்குள் 75,000 கோடி ரூபாய் இலக்கை அடைய தமிழ்நாடு முன்னேறி வருகிறது.

செப்டம்பர் 19-இல் Cochin Shipyard மற்றும் Mazagon Dock Shipbuilders ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் தலா 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது. இத்திட்டங்கள், தமிழ்நாட்டின் கடலோரப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அம்சமாக விளங்கி மாநிலத்தை கப்பல் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றும்.  இதன்மூலம் 10,000 பேர் நேரடியாகவும், 50,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவார்கள்.

இம்மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் 300 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.  தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே 5,000-க்கும் மேற்பட்ட வணிக சந்திப்பு கூட்டங்களும் நடைபெறுகின்றன. மேலும், இம்மாநாட்டின் கண்காட்சியில் Boeing, Airbus, Lockheed Martin, Dassault Aviation, HAL, BEL, L&T Defence, Rolls-Royce, Safran மற்றும் Tata Advanced Systems போன்ற முன்னணி நிறுவனங்கள் ஒன்றிய அரசு நிறுவனங்களான.  DRDO, ISRO, HAL, BDL, AVNL மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.

மேலும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு Unmanned Aerial Vehicle நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சுற்றுலா துறை இக்கண்காட்சியில் பங்கேற்று, தொழில்துறை வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய தொடர்புகளை ஒருங்கிணைக்கும் மாநிலத்தின் அணுகுமுறையை வெளிப்படுத்தும் வகையில் அரங்குகளை அமைத்துள்ளன.  IIT Madras, SRM, Anna University மற்றும் MaDeIT Innovation Foundation போன்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

TNDIC-ல் சர்வதேச தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்து இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், TIDCO மூலம் பாதுகாப்பு, சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும், புதிய தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும், AeroDefCon நிகழ்வை இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2027-இல் நடைபெறும் அடுத்த மாநாடு இன்னும் பெரிய அளவில் நடத்தப்படும் என்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். 

இம்மாநாடு தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கினை அடைந்திட வான்வெளி, பாதுகாப்பு மற்றும் கப்பல் கட்டும் துறைகள் முக்கிய தூண்களாக விளங்கும். 

Also Read: புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும்... அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு !