Tamilnadu

நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர்... சென்னை குடிநீர் செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.9.2025) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கத்தில் 66 கோடியே 78 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண உருவாக்கப்பட்டுள்ள “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்.

=> சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் :-

கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டத்தின்கீழ், பெறப்பட்ட தண்ணீரை சுத்திகரிப்பதற்காக சென்னைக்கு அருகிலுள்ள செம்பரம்பாக்கத்தில் 296 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டு 19.07.2007 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையத்தின் முதல் வரிசை குழாய் மூலம் நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகர பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகர பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை வளர்ச்சிக்கேற்ப பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து முழு கொள்ளளவான 530 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்குவதற்காக 66.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி புறவழிச் சாலை சந்திப்பு வரையிலான இரண்டாவது வரிசை குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சென்னை மாநகருக்கு கொண்டு செல்வதற்காக பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு முதல் பகுதி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து போரூர் வரை 11.7 கி.மீ. நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகளும், இரண்டாம் பகுதி பூவிருந்தவல்லி புறவழிச்சாலை சந்திப்பிலிருந்து கோயம்பேடு வரை 9.2 கி.மீ. நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் தேவைக்கு ஏற்பவும், பெருகிவரும் சென்னை மாநகரின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், ஏரியின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கனவே தினசரி வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டர் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்குவதால் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும். இதன்மூலம் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர் மற்றும் திருபெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொது மக்கள் பயன் பெறுவர்.

பல்வேறு நீர் நிலைகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களின் மூலம் சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 1180 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

=> “சென்னை குடிநீர் செயலி” :

பொதுமக்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்ய அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய கைபேசி செயலினை வடிவமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் தொடங்கி வைத்தார்.

“சென்னை குடிநீர் செயலி” புகைப்படங்களுடன் கூடிய பதிவு செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், பொதுமக்களால் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் (GIS) மூலம் தானாகவே கணினி வழியாகப் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு குறுஞ்செய்தி மற்றும் WhatsApp வாயிலாக அனுப்பப்படும். மேலும், புகார் பதிவு செய்த நபருக்கு உடனடியாக உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். இச்செயலியின் முக்கிய சிறப்பம்சமாக புகாரின் நிலை குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், புகார்களை இணையதளம், மின்னஞ்சல், முதன்முறையாக 8144930308 என்ற WhatsApp எண்ணிலும் Facebook, X தளம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் QR CODE மூலமும் பதிவு செய்யலாம். பொதுமக்களின் வசதிக்காக இச்செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் செயலியினை, Android மற்றும் iOS மொபைல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்புகார்கள் அனைத்தும் சென்னை குடிநீர் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தொழில்நுட்பமும் நேர்த்தியான நிர்வாகமும் இணைந்து, மக்கள் குறைகளை விரைந்து தீர்க்கும் ஒரு திறந்த மற்றும் பொறுப்புள்ள அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய குடிமக்கள் சாசனத்திற்கு ஏற்ப ஒரு மாறுபட்ட முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவி நிலநீர் புவியியலாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.