Tamilnadu

மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக மோசடி: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை!

மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள் என்ற பெயரில், இலட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது என்றும், இது போன்ற இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை, நீட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

தினந்தோறும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்ததில், மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள் என்ற பெயரில், இலட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., அவர்கள், பொதுமக்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்றும், மருத்துவ கல்லுாரியில் இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

அரசின் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்வதன் மூலமும், கல்லுாரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தை தொடர்பு கொண்டு மட்டுமே மருத்துவ படிப்பிற்கான இடத்தினை ஆலோசனை செய்யுமாறு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: சி.வி.சண்முகத்தின் ரூ.10 லட்சம் அபராதம் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்துக்கு ஒதுக்கீடு... அரசு உத்தரவு!