Tamilnadu
சுதந்திர தினத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?
79 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையின் போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசு - உங்கள் திராவிட மாடல் அரசு! இந்த வீர விடுதலைத் திருநாளிலும் ஒன்பது முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல் அறிவிப்பு –
மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு -
மாநில அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு -
வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல் பெற்றுவரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
நான்காவது அறிவிப்பு -
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு -
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ஆறாவது அறிவிப்பு -
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை, மாதவரத்தில் 33 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஏழாவது அறிவிப்பு -
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
எட்டாவது அறிவிப்பு -
ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.
ஒன்பதாவது அறிவிப்பு -
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு
15 கோடி ரூபாய் செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
இந்த ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும்!
Also Read
-
”போலி வாக்குகள் என்ற ‘பூஸ்டர் டோஸ்' மூலம் வெற்றி பெற்ற பிரதமர் மோடி” : பவன் கேரா குற்றச்சாட்டு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி சொன்ன தூய்மைப் பணியாளர்கள் : புதிய அறிவிப்புகளுக்கு வரவேற்பு!
-
”ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம் - விடுதலைத் திருநாள் போற்றிடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி
-
”ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வல்லமை” : சுதந்திரத் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
79-வது சுதந்திர தினம் : சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!