Tamilnadu
தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டங்கள்... தூத்துக்குடியில் VinFast ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் !
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் வித்திடும் பெரும் தொழில் திட்டமாக தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் ரூ.1300 கோடி முதற்கட்ட முதலீட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்வாகன உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பதினெட்டு மாதங்களுக்குள் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.8.2025) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார். 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 16,000 கோடி ரூபாய் உறுதி செய்யப்பட்ட முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, பதினெட்டு மாதங்களுக்குள் முதற்கட்டமாக, 1300 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட அடுத்த மாதத்திலேயே, அதாவது பிப்ரவரி 2024 மாதம், தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆலைக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட 18 மாதங்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் இத்திட்டத்தின் முதற்கட்ட உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பல துறைகளில் சிறந்து விளங்கும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின் குழுமத்தின் ஒரு அங்கமான வின்ஃபாஸ்ட் நிறுவனம், தனது புதிய அதிநவீன மின் வாகன உற்பத்தி ஆலையை, தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற் பூங்காவில் அமைத்துள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்த ஆலையில், ஆண்டுக்கு 50,000 கார்கள் உற்பத்தி செய்யும் அளவிற்கான தொழிற்சாலையை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மட்டும் இருந்து வரும் நிலையில், முதல் முறையாக தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பெரும் தொழில் திட்டம் இப்பகுதியின் அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும் வழி வகுக்கும்.
Also Read
-
தமிழ்நாட்டிலிருந்து கிடைத்துள்ள ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தியுள்ளதா ஒன்றிய அரசு! : கனிமொழி எம்.பி கேள்வி!
-
பணப்புழக்க மாற்றங்களை தடுக்க நடவடிக்கை என்ன? : மக்களவையில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன் MP!
-
சைபர் குற்றத்தில் சிக்கிய ரூ.1.65 கோடி, ஒரே மாதத்தில் மீட்பு! : சென்னை பெருநகர காவல்துறை தகவல்!
-
தமிழ்நாட்டிற்கு 6 ஆண்டுகளாக நிதியை நிறுத்திய ஒன்றிய அரசு : TR பாலு MP கேள்வி - வெளியான அதிர்ச்சி தகவல்!
-
”தேசிய திரைப்பட விருதுகளில் மொழி பாகுபாடு காட்டப்படுகிறது”: நடிகை ஊர்வசி குற்றச்சாட்டு!