Tamilnadu

உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!

உலக அளவில் புராதனமான இடங்களை யுனெஸ்கோ குழு ஆய்வு செய்து உலக புராதன சின்னமாக அறிவித்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் சிற்பங்கள்,மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மலை ரயில்,கும்பகோணம் ஐராதீஸ்வரர் கோவில் ஆகியவை புராதன நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 12 கோட்டைகள், மராட்டிய மன்னர்களின் ராணுவ கேந்திரங்களாக இருந்தவை என்பதால் இவற்றை கலாச்சார ரீதியிலான உலக புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்து இருந்தது. அந்தப் பட்டியலில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையும் இடம் பெற்றுள்ளன.

மராட்டியர்கள் கி.பி 1678 முதல் 1697 வரை செஞ்சிக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ததால் பிரதான பட்டியலில் இந்த கோட்டை இடம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ள 12 கோட்டைகளையும் யுனெஸ்கோவின் தேர்வு குழு பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.

செப்.27 ஆம் தேதி யுனெஸ்கோ பிரதிநிதி உள்ளிட்ட ஒன்றிய அரசின் அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் செஞ்சிகோட்டை உச்சி மலை வரை ஆய்வு செய்தனர். அப்போது கோட்டையில் உள்ள கல்யாண மஹால், யானை குளம்,தர்பார் மண்டபம், நெற்களஞ்சியம்,கோட்டையில் உள்ள பாலம்,கோட்டைமலை மீது உள்ள நெற்களஞ்சியம் ,பீரங்கிகள்,உள்ளிட்ட வரலாற்று சின்னங்களைஅவர்கள் பார்வையிட்டு சென்றார்.

இந்நிலையில் யுனெஸ்கோ நிறுவனம் மகாராஷ்ட்ராவில் சத்ரபதி சிவாஜி ஆட்சிசெய்த 11 கோட்டைகள் , தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையையும் உலக புராதன சின்னமாக அறிவித்துள்ளது. செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read: “நடப்பாண்டில் 10 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமனம்!” : TNPSC தலைவர் பிரபாகர் பேட்டி!