Tamilnadu

“தமிழ்நாடு பள்ளிகளில் வாழ்வியல் திறன் பயிற்சி இன்று முதல் தொடக்கம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பின் சிறப்பை விளக்கி, மக்களுடன் உரையாற்றினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அவர் தெரிவித்ததாவது பின்வருமாறு,

“கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பிலிருந்து ஒரு அலுவலர் கலந்து கொண்டு, “தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் உள்ள மாநிலங்களோடு போட்டி போடுகிறது. உலக நாடுகளை ஒப்பிடும் அளவிற்கு தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு உள்ளது” என்று பெருமிதம் தெரிவித்திருந்தார்.

அத்தகு சிறப்பு கொண்ட தமிழ்நாட்டில் 99 உரிமம் பெற்ற ரத்த வங்கிகள், 45 பகுப்பாய்வு மையங்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாடில் 2024 - 2025 ஆம் ஆண்டு அரசு ரத்த சேகரிப்பு மையங்கள் மூலம் 4,53,112 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தனியார் ரத்த சேகரிப்பு மையங்களில் நான்கரை இலட்சம் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சேகரிக்கப்படும் ஒரு கோடியே 24 லட்சம் ரத்த அலகுகளில் 9 லட்சத்திற்கும் அதிகமான ரத்த அலகுகள் தமிழ்நாட்டில் சேகரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் 50 கல்லூரிகளில் செஞ்சிலுவை சங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டம் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 11 கல்லூரிகளில் செஞ்சிலுவை சங்கங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.

படிப்படியாக எல்லா கல்லூரிகளுக்கும் செஞ்சிலுவை சங்கம் சென்றடையும், இதன் மூலம் இளைய மாணவர் சமுதாயத்தினரை உயர் ஒழுக்கம் உள்ள மாணவராக இந்த சங்கம் உருவாக்கும்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே எய்ட்ஸ் - HIV குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 100 பள்ளிகளில் வாழ்வியல் திறன் பயிற்சி தொடங்கியுள்ளது.

இவ்வரிசையில், 2025ஆம் ஆண்டு மருத்துவ நிதிநிலை அறிக்கையில் வெளியான மொத்த அறிவிப்புகளையும் செயல்படுத்த, தொடர் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Also Read: ”கீழடி விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!