Tamilnadu

“அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தது மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது...” - அமைச்சர் சேகர்பாபு அட்டாக்!

சென்னை சூளையில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் திருக்கோவில் மற்றும் பட்டாளத்தில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது : -

"திமுக ஆட்சி அமைந்து 3000-த்திற்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி அமைந்து இதுவரை 117 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான 7,597.77 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. அதனுடைய மதிப்பு ரூ.7,683 கோடி ஆகும்.

இந்த ஆட்சி அமைந்து மொத்தம் ரூ.6,306 கோடி மதிப்பில் 26,300 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்படுவது திராவிட மாடல் ஆட்சியில்தான். ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம் என்றால், அது தமிழ்நாடுதான்." என்றார்.

=> அமித்ஷா வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்...

"அமித்ஷா வருகையால் பதற்றமோ பயமோ திமுகவுக்கு இல்லை. திமுக கூட்டணி வலுவாக தெளிவாக உள்ளது. எனவே பாஜகவிடம் பதற்றம் இருப்பதால்தான் அவ்வப்பொழுது முக்கிய புள்ளிகள் தமிழ்நாட்டுக்கு வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்துதான் ஒன்றியமே இன்று பதற்றத்தில் உள்ளது என்பதற்கு அமித் ஷாவின் வருகையே ஒரு எடுத்துக்காட்டு.

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடத்தப்படும் முருகர் மாநாடுதான் பக்தி மாநாடு. பாஜக, ஆர்.எஸ்.எஸ். நடத்தக்கூடிய இந்த மாநாடு அரசியல் கட்சி சார்பில் நடத்தப்படும் அரசியல் மாநாடு." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை செய்வது என்பது சற்று சவாலான பணி. ஏனென்றால் ராஜகோபுரம் சற்று விரிசல் ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலையில் உள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திறனற்ற ஆட்சிக்கு ஒரு திட்டத்தை சாட்சியாக வைக்க வேண்டுமென்றால் கடந்த கால எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த ஆட்சிக்கு கிளாம்பாக்கம்தான் ஒரு சாட்சி. திட்டமிடல் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வடிவமைத்ததன் காரணமாக அதிமுக ஆட்சிக் காலத்தில் செப்பனிட முடியவில்லை. கிளாம்பாக்கத்தில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வடிகாலை கூட அதிமுக ஆட்சியில் அமைக்கவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கான வழி மார்க்கங்கள் ரயில் நிலையங்கள் கூட அமைக்கப்படவில்லை. அங்கு இருந்த பூங்காக்களை மேம்படுத்தவில்லை. முடங்கிக் கிடந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணிகள் அதிக அளவில் குவிந்ததால், தேவையான பேருந்துகளை ஏற்பாடு செய்து பயணிகளின் திட்டமிட்ட பயணத்தை நிறைவேற்றியுள்ளோம். திமுக ஆட்சியில் எந்த விதமான தவறில்லை என்பதால் போக்குவரத்துத்துறை சார்பிலும் அரசின் சார்பிலும் விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள்ளாக அனைத்தையும் சரி செய்து பயணிகளின் பயணத்தை இனிதாக்கிய அரசு எங்களுடைய அரசு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கத்தான் செய்வார்கள்." என்றார்.

Also Read: இதோ ஆபத்து வந்துவிட்டது... ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தயாரா? - தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!