Tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 4 ஆண்டு சாதனை மலர் : எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் கட்டுரைகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (03.06.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற செம்மொழி நாள் விழாவில் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட நான்காண்டு சாதனை மலரினை வெளியிட்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சராக 2021ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற நாள் முதல் மாநிலத்தின் கடைக்கோடி மக்களும் பயன்பெறத்தக்க வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், மகளிர் விடியல் பயணம் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடிக்கல்வி திட்டம், ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், முதல்வர் மருந்தகம் திட்டம் போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களினால் தமிழகம் முன்னேற்றப்பாதையில் வளர்ச்சியடைந்துள்ளது.

அவ்வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நான்காண்டு நிறைவடைந்ததையொட்டி, கடந்த நான்காண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் துறை வாரியாகத் தொகுத்து, தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் ’தமிழரசு’ சார்பில் நான்காண்டு சாதனை மலர் ஒன்றினை தயாரித்துள்ளது.

இச்சாதனை மலரில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் கட்டுரைகளான, ஊடகவியலாளர் ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய ”தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குநர் ரெ.கோமகன் அவர்கள் எழுதிய “மகளிர் வாழ்வில் மகிழ்ச்சி”, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உதவி இயக்குநர் செல்வ புவியரசன் அவர்கள் எழுதிய “அறம் காக்கும் ஆட்சி”, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உள்ளடக்க மேலாண்மை வல்லுநர் ந.செல்லப்பா அவர்கள் எழுதிய “ஓர் ஏர் உழவர் காக்கும் அரசு”, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உள்ளடக்க மேலாண்மை வல்லுநர் த.ராஜன் அவர்கள் எழுதிய “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்ற கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

மூத்த பத்திரிகையாளர், ந.ராமேஷ் அவர்கள் எழுதிய “தொழில் பெருகும் தமிழ்நாடு”, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், பொருள் அளவீட்டியல் துறை, முனைவர் சௌ.புஷ்பராஜ் அவர்கள் மற்றும் தி.சு.கி.துர்கேஷ் நந்தினி அவர்கள் ஆகியோர்கள் எழுதிய “இந்தியாவின் விடியல் பயணத்தால் வழிகாட்டும் தமிழக ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள்”, முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் பேராசிரியர் இரா.சுப்பிரமணி அவர்கள் எழுதிய “தமிழ்நாடு; உயர்கல்வியில் முதலிடம் அறிவுப் புலத்தின் புகழிடம்” என்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும், எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் திரு. சூரியா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய “இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு”, வாவ் மீடியா வேர்ல்ட், துணை ஆசிரியர் .பி.எம்.சுதீர், அவர்கள் எழுதிய “விளையாட்டல்ல நிஜம் கனவுகள் நனவாகின்றன!”, மருத்துவர் ப.மீ.யாழினி அவர்கள் எழுதிய “எல்லார்க்கும் எல்லாம்: தமிழ்நாட்டின் சுகாதாரப் பெருவழி” ஆகிய கட்டுரைகளும் மற்றும் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், திட்டங்களின் பயன்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

இந்த நான்காண்டு சாதனை மலரினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (03.06.2025) நடைபெற்ற செம்மொழி நாள் விழாவில் வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல் திருமாவளவன், வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா. முத்தரசன் , இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Also Read: கலைஞர் செம்மொழித் தமிழ் விருது : தாயம்மாள் அறவாணனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!