Tamilnadu
“‘ஓரணியில் தமிழ்நாடு’ - புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம்” - திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!
மதுரையில், உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பொதுக்குழுவில், “மண் - மொழி - மானம் காத்திட 'ஓரணியில் தமிழ்நாடு' கழக புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டம்!” குறித்து சிறப்புத் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அந்த தீர்மானம் பின்வருமாறு ;- “எல்லாருக்கும் எல்லாம்’ எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ்நாடு" என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
கழகத்தின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி - நகர - ஒன்றிய - பேரூர் - வட்ட - கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும். அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும்.
புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!