Tamilnadu

துணை வேந்தர்கள் நியமனம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தேவையற்ற அவசரம் : The Hindu விமர்சனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தேவையற்ற அவசரம் என்ற தலைப்பில் "தி இந்து" ஆங்கில நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வந்ததால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது என்றும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடித்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்வு கண்டது என்றும் "தி இந்து" ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய விடுமுறை கால அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு வழங்குவதை வழிவகை செய்ய முயல்வதாக "தி இந்து" ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 12 பல்கலைக்கழகங்கள் துணை வேந்தர்கள் இல்லாமல் செயல்படும் நிலையை உயர்நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்தி இருப்பதாகவும் சாடியுள்ளது. துணைவேந்தர்கள் தொடர்பான முந்தைய வழக்கின் முரண்பட்ட தீர்ப்புகளை உதாரணமாக கூறி, யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக இந்த சட்டங்கள் இருப்பதாக உயர்நிதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான மனுவை அவசரமாக பட்டியலிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டபோது, இந்த விவரத்தை உயர்நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதையும் உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை உயர்நீதிமன்றம் புறக்கணித்தது. மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் பதிலளிக்க போதிய அவகாசம் தராமலேயே சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக "தி இந்து" ஆங்கில நாளிதழ் விமர்சித்துள்ளது.

அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ், ஒரு மாநிலம் இயற்றிய சட்டத்தை, எதோ ஒரு கீழ்நிலை அதிகாரி வரையறை செய்த யுஜிசி விதிமுறைகளால் மீற முடியுமா? என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ள "தி இந்து" தலையங்கம், துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான இப்பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Also Read: “கீழடி என்பது புராணங்களில் எழுதப்பட்ட கற்பனை நகரமல்ல!” : தமிழிசைக்கு சு.வெங்கடேசன் பதிலடி!