Tamilnadu
நகைக் கடன் - ஏழை மக்களை வஞ்சிக்கும் RBI : CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!
ஏழை, எளிய நடுத்தர மக்கள் நகைக் கடன் பெறவே முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கியின் மோசமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகளில், ஏற்கனவே தங்க நகையின் மொத்த மதிப்பில் 80 சதவிகிதம் கடன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 75 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது ஏழை, எளிய மக்களை வஞ்சிப்பதாகும். கடன் கோருபவர்களின் சொந்த நகையா என்பதை தெரிந்து கொள்ள நகை வாங்கிய ரசீது வழங்க வேண்டுமென கூறுவதும் பெரும்பாலான நகைகள் இரண்டு, மூன்று தலைமுறைகளை கடந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் அத்தகைய நகைகளுக்கு ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டுமென்பதும் எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும்.
மேலும், அடமானம் வைத்த நகையை முழுமையாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய நிபந்தனை நகையை மறு அடமானம் வைப்போர் கந்துவட்டிக்காரர்களிடம் தஞ்சம் புகுவதற்கான ஏற்பாட்டை செய்து கொடுக்கிறது. இது கிராமப்புற மக்களையும், ஏழை, எளிய மக்களையும், விவசாயிகள், சிறு-குறு தொழில்முனைவோர்கள், வணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு மக்களையும் கொடுமைப்படுத்தும் செயலாகும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்குவதற்கு மொத்த கடனில் 10 சதவிகிதத்தையே அடமானமாக வங்கிகள் கேட்பது, பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை பெருமுதலாளிகள் வாங்கி விட்டு திரும்ப செலுத்தவில்லையென்றால் அவற்றை தள்ளுபடி செய்வது, கடன் வாங்கி விட்டு அவற்றை திரும்ப செலுத்தாத பெருமுதலாளிகளின் பெயர்களை வெளியிட மறுப்பது என்று பல்வேறு வகைகளில் பெருமுதலாளிகளுக்குச் சாதகமாக பொதுச் சொத்துக்களை வாரிக்கொடுக்கும் வங்கிகள் தான் ஏழை, எளிய கிராமப்புற மக்கள் வாங்கும் சிறு அளவிலான நகைக் கடன்களை கட்டுப்படுத்துவதற்கும், நிராகரிப்பதற்குமான செயல்களில் இறங்கியுள்ளன. இது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும்.
எனவே, ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய நிபந்தனைகளை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் நகைக்கடன் வழங்கும் விதிமுறைகளை எளிமையாக்க ரிசர்வ் வங்கிக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!