Tamilnadu
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி... துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (19.5.2025), 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் அரசு உயர் நிலைக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அவர்கள் பேசுகையில், மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உயர்கல்வித் துறையின் மூலம் 22.4.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உயர் அலுவலர்கள், அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி மெட்ராஸ், ஒன்றிய அரசின் தேசிய தகவலியல் நிறுவனம் (NIC), தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA), தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) உள்ளிட்டவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம் பெற்றுள்ள தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப தரநிலைக் குழுவினர் இதுவரை 7 கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள மடிக்கணினியின் செயல்திறன், நினைவகத்தின் அளவு (STORAGE), மென்பொருள் (SOFTWARE), மின்கலத்தின் (பேட்டரி) திறன், வன்பொருட்கள் (HARDWARE) உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்களுக்கான விவரக்குறிப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
மேலும் மென்பொருள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுக் குழுவினர் ஒப்பந்தப் புள்ளி ஆவணத்தை தயார் செய்து சமர்பித்தவுடன் ஒப்பந்தபுள்ளி தொடர்பான செயல்பாடுகள் விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும் மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள விநியோகத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்லூரி பயிலும் மாணவர்களை திறன் மிக்க மாணவர்களாக உருவாக்கிடவும், அவர்கள் உயர்கல்வி கட்டாயம் பயில்வதை உறுதி செய்திடவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
தொழில்நுட்பத் திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் அவர்களின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சென்று சேர்த்திட அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை அர்பணிப்பு உணர்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், இ.ஆ.ப., உயர் கல்வித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., நிதித்துறை செயலாளர் (செலவினம்) எஸ்.நாகராஜன், இ.ஆ.ப., கல்லூரிக் கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., தொழில் நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!