Tamilnadu

“தந்தை பெரியார் சொன்னதை Gen Z இளைஞர்கள்தான் அதிகமா follow பண்றீங்க... - துணை முதலமைச்சர் உதயநிதி கலகல!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (14.5.2025) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு 2025 நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, கல்லூரி கனவு 2025 உயர்கல்வி வழிகாட்டி புத்தகத்தினை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உண்டு உறைவிட பயிற்சி பெற்று, மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் (SSC), இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மற்றும் வங்கிப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற 58 மாணவர்களை பாராட்டி கேடயங்களை வழங்கினார். 

நான் முதல்வன் - கல்லூரிக்கனவு 2025 தொடக்க விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  ஆற்றிய உரை :

நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய கனவுத்திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், இந்த கல்லூரிக்கனவு – 2025 திட்டத்தை துவங்கி வைப்பதிலும், SSC, RRB மற்றும் IBPS ஆகிய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

இங்கே ஏராளமான மாணவர்கள், மாணவிகள் வந்து இருக்கின்றீர்கள். அதே போல, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், Zoom call  மூலமாக, காணொளி காட்சி மூலமாக பல்வேறு மாணவர்கள் இணைந்துள்ளார்கள். நீங்கள் எல்லாருமே School முடிச்சிட்டு, College பற்றிய கனவுகளோட இங்க வந்து இருக்கிறீர்கள். 2K கிட்ஸ் உங்களுக்கு அட்வைஸ் பண்ணினால் சுத்தமா பிடிக்காது என்று எனக்கு தெரியும்.

தந்தை பெரியார் அவர்கள், அடிக்கடி சொல்வார். “யார் எதை சொன்னாலும், அதை அப்படியே ஏத்துக்காத. ஏன், எதுக்கு, எப்படின்னு கேள்வி கேளு. அப்படி கேள்வி கேட்டு, அது உன்னுடைய பகுத்தறிவுக்கும், புத்திக்கும் எட்டுனா மட்டும் அதை ஏத்துக்கன்னு,” தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். தந்தை பெரியார் அவர்கள் சொன்ன விஷயத்தை யார் follow பண்றாங்களோ இல்லையோ, இங்க வந்திருக்கக்கூடிய Gen Z இளைஞர்களான நீங்க மட்டும் தான் அதிகமா follow செய்கிறீர்கள். 

அந்த அளவுக்கு இயல்பிலேயே அறிவும், ஆற்றலையும் பெற்ற உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.  பள்ளிக்கூட படிப்பை முடித்து விட்டு, நீங்கள் எல்லாம் உயர்கல்விக்காக வெளி உலகத்துக்கு இப்பதான் போகப்போகிறீர்கள். உங்களை பத்திரமா கையை பிடிச்சு அழைச்சுட்டுப் போய், உங்களுக்கெல்லாம் ஒரு சரியான எதிர்காலத்தை அமைச்சு கொடுக்கிறதுக்காகத்தான், இந்த ‘கல்லூரிக்கனவு’ திட்டம் செயல்படுத்தப்படுது.

பல்வேறு சூழல்களால உயர்கல்வி சேர தயங்குற மாணவர்கள் இருக்கின்றார்கள். அவங்களை கண்டுபிடித்து, உரிய வழிகாட்டுதல்களை கொடுத்து, கல்லூரியில சேர்த்து விடுறது தான், இந்த கல்லூரிக்கனவு திட்டத்தினுடைய ஒரே நோக்கம். அப்படி தான்,  “கல்லூரி கனவு” மூலமாக ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் மாணவர்களை நாம் உயர்கல்வி படிக்க வைக்க போகிறோம்.

நீங்க ஸ்கூல் படிக்கும்போது, “10 ஆம் வகுப்பு தேர்வு மிக, மிக முக்கியம். அது தான் உங்களுடைய வாழ்க்கைக்கு அடித்தளம்”  என்று உங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்லி இருப்பார்கள். அடுத்து, பிளஸ் 2 போகிறபோது, “பிளஸ் 2 தான் உங்க வாழ்க்கையை மாற்றப்போகிறது என்று சொல்லியிருப்பார்கள். இப்போ, காலேஜ்ல ஒழுங்கா படிச்சா தான் வாழ்க்கையில எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லி உங்களை பயமுறுத்துவார்கள். 

இது ஏதோ உங்களை பயமுறுத்த மட்டுமே சொல்லுகின்ற விஷயம் கிடையாது. படிப்பு தான் உங்களுடைய வாழ்க்கையை மாத்துறதுக்கான ஒரே டர்னிங் பாய்ண்ட். இன்றைக்கு இவ்வளவு பேரு, காலேஜ் போக போகிறீர்கள். நூறு வருஷத்துக்கு முன்னாடி நிலைமை இப்படி இருந்ததா  என்றால் கிடையாது, உங்களுடைய பல பேருடைய தாத்தா, பாட்டி பள்ளிக்கூட வாசலையே மிதித்திருக்க மாட்டார்கள். பள்ளிக்கூட படிப்பையே தாண்டியிருக்க மாட்டார்கள்.

ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை மாறி இருக்கின்றது. இன்றைக்கு இந்தியாவுலேயே அதிகம் பேர் உயர்கல்வி படிக்கின்ற மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

அதற்கு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எடுத்த முயற்சிகளினால், அவர்களுடைய செயல்பாடுகளினால் கிடைத்த, இட ஒதுக்கீடு மிக, மிக முக்கிய காரணம் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு கிடைத்ததினால் தான், இன்றைக்கு எல்லாருக்கும் கல்வி போய் சேர்ந்துள்ளது. 

அவங்களுக்கு உதவுவதற்காக தான், “உயர்கல்வியில் சேருகின்ற முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசே கல்வி கட்டணத்தை செலுத்தும் என்று” 17 வருடங்களுக்கு முன்பே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.

அதுமட்டுமில்லாமல், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், College-க்கு போய்ட்டு வர Free Bus Pass-னு கலைஞர் அவர்கள் ஏராளமான திட்டங்களை உருவாக்கி கொடுத்தார்கள். இதையெல்லாம் இங்கே நான் உங்களிடம் சொல்றதுக்கு ஒரே காரணம்,  நீங்கள் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்ததுக்கு பின்னால் ஒரு பெரிய இயக்கத்தோட உழைப்பு இருக்கின்றது. கழக அரசு கொண்டு வந்த பல திட்டங்கள் இருக்கின்றன. 

இவ்வளவும் சேர்ந்து தான் இன்னைக்கு உங்களை எல்லாம்
இந்த நிலைமைக்கு மேல உயர்த்தி இருக்கு. இதுக்கு மேலயும்
உயர்த்த இந்த அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு கலைஞர் அவர்களோட தொடர்ச்சியாக, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அரசுப்பள்ளியில படித்து, உயர்கல்வி சேருகின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என்று சிறப்பான திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த திட்டங்கள் மூலமாக அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேருகின்ற மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகையை நம்முடைய அரசு, முதலமைச்சர் அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களில் பல பேருக்கு அந்த உதவித்தொகை கிடைக்க போகின்றது.

கல்வியைப் பொறுத்தவரைக்கும், இன்றைக்கு வட இந்தியாவுல இருக்கிற நிலைமை வேற. அங்க இருக்கிற மக்களுக்கு அடிப்படை தேவைகளே பெரிய விஷயமா இருக்கின்றது. 

அங்கே தமிழ்நாடு மாதிரி எல்லா குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்படுவது கிடையாது. ஒருவேளை, அவங்க பள்ளிப் படிப்ப முடிச்சாலும், கல்லூரிகளில் சேருகின்ற மாணவர்களோட சதவீதம் தமிழ்நாட்டோட compare பண்ணீங்கனா ரொம்ப, ரொம்ப குறைவு.

GER-னு சொல்வாங்க. Gross Enrollment Ratio அதாவது,
பள்ளிகளில் இருந்து உயர்கல்வியில சேருகின்ற மாணவர்களோட சதவீதம். தமிழ்நாட்டின்  GER இன்றைக்கு 52 சதவீதம். ஆனா, ஒட்டுமொத்த இந்தியாவின்  சதவீதம் எடுத்து பார்த்தீர்கள் என்றால், வெறும் 29 சதவீதம் தான். 

தமிழ்நாட்டினுடைய இந்த வளர்ச்சியை  இந்தியாவுல இருக்கக்கூடிய பிற மாநிலங்கள் அடைய வேண்டுமென்றால் இன்னும் 10, 15 வருடங்கள் ஆகும். அந்த அளவுக்கு தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதற்கும் முழுக் காரணம் நம்முடைய திராவிட இயக்கங்களுடைய ஆட்சிகள் தான்.

உயர்கல்வி Admission-ஐ பொறுத்தவரை நுழைவுத் தேர்வே
இருக்கக் கூடாது என்பது தான் கழக அரசினுடைய ஒரே கொள்கை. ஆனா, புதிய கல்விக் கொள்கை மூலமா, medical, engineering மட்டுமல்ல, Arts college-ல கூட ஒன்றிய அரசு நுழைவுத் தேர்வை கொண்டுவரப் பார்க்கிறார்கள். 

அதனால தான், இந்த புதிய கல்விக் கொள்கையை நம்முடைய முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு அரசும் கடுமையாக எதிர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதையெல்லாம் விரிவாக நான் உங்களிடம் பேசுறதுக்கு காரணம், நீங்கள் எல்லாம் பொறுப்பாக படித்து முன்னேறனும் என்கின்ற  அந்த ஒரே எண்ணத்தில்தான், அக்கறையில் தான்.

உயர்கல்வினாலே medical, engineering, arts and science courses-தான் எல்லாருக்கும் தெரியும். அப்படிதான் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனா, உலகம் ஒவ்வொரு நாளும் இன்றைக்கு நவீனமாகிட்டே வருது. அதற்கு தகுந்த மாதிரி படிப்புகளும் புது, புதுசா வந்துட்டே இருக்கு.

இப்ப, AI னு சொல்கின்ற Artificial Intelligence Engineering வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. அதுலயே Data Science, Cyber Security, Quantum Computing-னு தனித்தனியாக படிப்புகள் வருகின்றது. இதெல்லாம் ஒரு சில வருஷங்களுக்கு முன்னாடி நாம் யாருக்கும் தெரியாது, ஆனால், இப்ப பெருகி வரும் வேலைவாய்ப்பால் நிறைய பேர் இந்த courses-களை விரும்பி படிக்கிறார்கள். இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத் தான், இந்த கல்லூரிக்கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நாம் இங்கே நடத்திக்கொண்டிருக்கிறோம்.

அதன்படி இந்த நிகழ்ச்சி இங்கே நடக்கின்றது. இங்கே கல்வியாளர்கள் வந்து இருக்கின்றார்கள். அவர்கள் உங்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களை தருவார்கள். அதையெல்லாம் நீங்க carefulஆ கேட்டு  கல்லூரியில உங்களுக்கு ஆர்வமுள்ள படிப்பைத் தேர்ந்தெடுத்து படிங்க.

கல்லூரியில படிக்கிறதுக்கு மட்டுமல்ல, கல்லூரி முடிச்சுட்டு வேலைக்கு போறதுக்கும் நம்முடைய நான் முதல்வன்’ திட்டம் உங்களுக்கு துணை நிற்கும். தனியார்துறை வேலைக்கு போக Job Oriented Skill training-ஐ நான் முதல்வன் தந்து கொண்டிருக்கிறது.

அதே மாதிரி அரசுத்துறை போட்டித் தேர்வுக்கு தயாராக,
‘நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு’ இருக்கு. இதன் மூலமாக, உதவித்தொகையோட, தங்கி படிக்கிற வசதியையும் நம்முடைய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு மூலமாக, இந்த வருடம்,
50 தமிழ்நாட்டு மாணவர்கள் IAS, IPS தேர்வுகளில் வெற்றி பெற்று இருக்கின்றார்கள். இது மிகப்பெரிய ஒரு சாதனை.

எப்படி IAS, IPS தேர்வுகளில் வெற்றி பெற்று இருக்கின்றார்களோ, அதே மாதிரி  இந்த SSC, RRB மற்றும் IBPS தேர்வுகளுக்கு ‘நான் முதல்வன்’ மூலமாக பயிற்சி பெற்ற மாணவர்கள், 58 பேர் வெற்றி பெற்றி இருக்கின்றீர்கள். அவர்களுக்கும்  நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களோட வெற்றி அரசுப்பணி கனவோட தயார் ஆகிட்டு இருக்கின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நம்பிக்கை தந்து கொண்டிருக்கிறது. அதுக்கு உங்க எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களை பல்வேறு உயரங்களுக்கு அழைத்துச் செல்ல, ‘நான் முதல்வன் திட்டம்’ இருக்கின்றது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நன்றாக படிக்கிறது மட்டும் தான்.

ஆகவே, இன்றைக்கு, கல்லூரிக்கனவு திட்டம் மூலமாக பயன்பெறப் போகின்ற அத்தனை மாணவர்களுக்கும்  SSC, RRB, IBPS தேர்வுகளில் வெற்றி பெற்ற வருங்கால அதிகாரிகளுக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். 

Also Read: 5 ஆண்டுகளாக குறைந்து வரும் குழந்தைகள் இறப்பு விகிதம்... ‘தமிழகம் பெருமைப்படலாம்’ என்று தினமணி பாராட்டு!