Tamilnadu
“இன்றைக்கு தமிழ்நாட்டில் உணவுப்பஞ்சம் இல்லை என்றால் காரணம் கலைஞர்தான்” - துணை முதலமைச்சர் நெகிழ்ச்சி!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.5.2025) சென்னை, திருவெற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் 1,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை :
இன்றைக்கு இந்த திருவொற்றியூர் தொகுதி கத்திவாக்கத்தில் 1,500 நபர்களுக்கு பட்டா வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த கத்திவாக்கம் பகுதிக்கு நான் ஏற்கனவே பல முறை வருகை தந்திருக்கின்றேன்.
போன வருஷம் கூட, ஃபெங்கல் புயல் வந்தபோது, இந்த கத்திவாக்கத்துக்கு வந்து உங்களோடு சேர்ந்து, கழகத்தினரோடு சேர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டோம். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரைக்கும் எப்போதுமே சொன்னதை செய்கின்ற அரசு நம்முடைய அரசாகும்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எப்பொழுதும் சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் அப்டினு சொன்னார். ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்று சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து சாதனை படைத்து வருகின்றார்.
அந்த வகையில்தான் சென்ற மக்களவைத் தேர்தலின்போது சென்னையில பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கின்ற மக்களுக்கு, பட்டா கொடுக்கவேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.
அதற்காக வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார்கள். அந்தக்குழு இரவு, பகல் பார்க்காமல் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, அலசி ஆராய்ந்து. இன்றைக்கு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி பட்டா கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன் அடிப்படையில்தான் சென்ற ஜுலை மாதம் மாதவரத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 200 பேருக்கு நானே நேர்ல அந்த பட்டாக்களை வழங்கினேன். அடுத்து, சோழிங்கநல்லூர் தொகுதியில சுமார் 2 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தோம்.
இந்த திருவொற்றியூர் தொகுதிக்கும் வந்து, சென்ற செப்டம்பர் மாதத்துல 2 ஆயிரத்து 120 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை கொடுத்திருக்கின்றோம்.
அதைத்தொடர்ந்து, சென்னையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பட்டாக்களை வழங்கியிருக்கின்றோம். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நானும் மற்றும் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களும் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்களை கொடுத்து இருக்கின்றோம். அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு 1500 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்க இருக்கின்றோம்.
அதுலயும் குறிப்பாக, நம்முடைய வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு இடம் கொடுத்தவர்கள் 400 பேருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதற்கான பட்டா பல ஆண்டுகளா வழங்கப்படாமல் இருந்தது. அதை கேள்விப்பட்ட நம்முடைய முதலமைச்சர் அவர்கள், உடனே அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில இன்றைக்கு, 35 வருடங்களுக்கு பிறகு அந்த 400 பேருக்கும் இன்றைக்கு இந்த மேமையில் பட்டா வழங்கப்பட இருக்கின்றது.
பொதுவாக, இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை
ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் அடிப்படையான தேவைகள். நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம் எப்போதெல்லாம் ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் இந்த தேவைகளை நம்முடைய தலைவர்கள் பார்த்து, பார்த்து நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுத்தார். அண்ணா நூற்றாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு கிலோ அரிசியை 1 ரூபாய்க்கு கொடுத்தார். அதுமட்டுமில்ல, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மாதம் 5 கிலோ வரை விலையில்லா அரிசியை கொடுத்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் உணவுப்பஞ்சம் இல்லை. அப்படி என்றால், அதுக்கு காரணம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய, நுகர்பொருள் வாணிப கழகம்தான்.
உடுத்த உடை அப்படின்னு வரும் போது, திராவிட இயக்கத்துக்கும் நெசவாளர்களுக்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இன்றைக்கு நெசவுத்தொழில் உயிர்ப்போட இருக்க காரணமே திராவிட முன்னேற்ற கழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தான்.
இதில் மூன்றாவது முக்கியமான விஷயம் தான், இருக்க இடம்
என்பது. ஏழை எளிய மக்களுக்கு வீடு கிடைக்க வேண்டும் என்று, குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக ஆரம்பித்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்னு மேம்படுத்தி இருக்கின்றார்.
சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், யாரும் வீடு இல்லாம கஷ்டப்படக் கூடாதுன்னு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை நிறைவேற்றி வைத்தார்கள். அதன் மூலமாக வீடு இல்லாத தமிழ்நாட்டு மக்களுக்கு இன்றைக்கு லட்சக்கணக்கில் வீடுகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
வீடு ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வீட்டுக்கான பட்டாவும் முக்கியம். பட்டா தான் உங்கள் வீட்டுக்கான சட்டப்பூர்வ உரிமை. அதை புரிந்து கொண்ட நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய திராவிட மாடல் அரசு அந்த உரிமையை இன்றைக்கு நிலைநாட்டி இருக்கின்றது.
சென்னையை பொறுத்தவரை 1970, 1980-களில் வழங்கப்பட்ட இந்த வீட்டுமனைகளுக்கு பல இடங்களில் பட்டா இல்லை. நிறைய டெக்னிக்கல் காரணங்கள் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து, இன்றைக்கு இந்த பட்டாவை கொடுத்து இருக்கிறோம்.
இவ்வளவு நாள் சொந்த வீடாக இருந்தாலும், பட்டா இல்லையேன்னு கவலையும், கலக்கமும் உங்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு உங்க வீட்டுல நீங்க நிம்மதியா தூங்கலாம். உங்களுடைய மகிழ்ச்சி உங்களுடைய முகங்களிலேயே தெரிகிறது.
நீங்க பட்டாவைத் தேடி போன காலம் மாறி, மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் எல்லோரும், உங்களைத் தேடி வந்து இந்த பட்டாக்களை நாங்கள் கொடுத்திருக்கின்றோம். இதன் மூலமாக, உங்களுக்கான அடையாளத்தை, முகவரியை நம்முடைய திராவிடல் மாடல் அரசு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த திட்டம் மட்டுமில்லை, நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கின்றது.
மகளிருக்கு விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் இப்படி பல்வேறு திட்டங்கள். மக்களைத்தேடி மருத்துவம், உயர்கல்வி படிக்கின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் இப்படி பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
அதேபோல, கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் மாதத்தில் இருந்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதியதாகவும் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இப்படி நம்முடைய அரசு தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கின்ற வகையில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்த வடசென்னை பகுதியை மேம்படுத்த, 6 ஆயிரம் கோடி ரூபாயில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், வாரம் ஒரு முறையாவது இதே வட சென்னைக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியிருக்கூடிய பல்வேறு திட்டங்களின் காரணத்தினால், இன்றைக்கு தமிழ்நாடு இந்தியாவுலேயே வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலமாக உருவெடுத்திருக்கிறது.
நான் உங்களிடம் கேட்பதெல்லாம், நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களை, சாதனைகளை நீங்கள்
4 பேருக்கு எடுத்துச் சொல்லணும். இந்த அரசினுடைய, பிராண்ட் அம்பாசிடர்களாக மக்களாகிய நீங்கள் செயல்பட வேண்டும். இன்றைக்கு 1,500 பட்டாவை கொடுக்க இருக்கின்றோம். இதோட இது முடியப்போறது இல்லை. இந்த பகுதி மக்களுக்காக இன்னும் 18 ஆயிரம் பட்டாக்கள் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
விரைவிலேயே அதையும் உங்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக கொடுக்க இருக்கிறோம்ங்கிற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் நான் தெரிவித்து கொள்கிறேன்.
இந்தப் பட்டாக்களை தயார் செய்ய இரவு, பகல் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய துறையினுடைய அமைச்சர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கும், வந்திருக்கக்கூடிய அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை செயலாளர்கள், பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட குழு மற்றும் அந்த குழுவினுடைய சிறப்பு அதிகாரி திரு.மதுசூதன ரெட்டி ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையா இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேபோல், வீட்டுமனைப்பட்டா பெற்ற அத்தனைப் பேருக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!