Tamilnadu
சாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிப் பயணத்தில் திமுகவிற்கு மற்றொரு வெற்றி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், ”நாடுமுழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக நீதிப் பயணத்தில் திமுகவிற்கு மற்றொரு வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றதால், ஒரு வழியாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆனால், முக்கியமான வினாக்களுக்கு இன்னும் விடையில்லை. இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? எப்போது முடிவுறும்? இவர்கள் இதனைத் தற்போது அறிவித்திருப்பது ஒன்றும் தற்செயலானது அல்ல. பிகார் மாநிலத் தேர்தலில் சமூகநீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான், சந்தர்ப்பவாத நடவடிக்கையாக தற்போது இதனை அறிவித்திருக்கிறார்கள்.
நாம் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கோரியபோது, “மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள்” என நம் மீது குற்றம்சாட்டிய அதே பிரதமர் அவர்கள், அவர் தொடர்ச்சியாகத் தூற்றிய அதே கோரிக்கைக்கு இப்போது பணிந்துவிட்டார். முறையாகத் திட்டங்களை வகுப்பதற்கும், மக்கள்நலத் திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்கும், மெய்யான சமூகநீதியை அடையவும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்றியமையாததாகும். அநீதிக்குத் தீர்வு காணவேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அறிந்தாக வேண்டும்!
இன்றைய அறிவிப்பு தமிழ்நாடு அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் போராடிப் பெற்ற வெற்றி ஆகும். முதன்முதலாக நாம்தான் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்துத் தளங்களிலும் இதனை வலியுறுத்தினோம். ஒவ்வொரு முறை பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும்போதும், பலமுறை கடிதங்கள் எழுதியும் இதனை ஒன்றிய அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.
மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கலாம் எனச் சிலர் கோரியபோது கூட, நாம்தான் உறுதியாகச் சொன்னோம்: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பொறுப்பு. ஒன்றிய அரசுதான் இதனை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ள முடியும், அதுதான் சென்சஸ் சட்டப்படி சட்டரீதியாகவும் செல்லும் என்றோம். நமது நிலைப்பாடு சரி என இன்று நிறுவப்பட்டுள்ளது.
திராவிட மாடலின் வழியே சமூகநீதிக்கான எங்கள் பயணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், நாம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், இது மற்றுமொரு வெற்றியாகும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!