தமிழ்நாடு

”அன்புதான் மதங்களின் அடையாளம் என்று கருதியவர் போப் பிரான்சிஸ்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

மாபெரும் மாற்றங்களை முன்னெடுத்த மாமனிதர் - போப் ஆண்டவர் புகழ் வாழ்க! அவர் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்!

”அன்புதான் மதங்களின் அடையாளம் என்று கருதியவர் போப் பிரான்சிஸ்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30.4.2025) சென்னை, இலயோலா கல்லூரியில், தமிழக துறவியர் பேரவை மற்றும் இயேசு சபை சென்னை மறைமாநிலம் இணைந்து நடத்திய திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களுக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தமிழக துறவியர் பேரவையும், சென்னை மறைமாநில இயேசு சபையும் இணைந்து நடத்தக்கூடிய நினைவு அஞ்சலி நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களுக்கு எனது இதய பூர்வமான அஞ்சலியை நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தாலும் - கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களால் மட்டுமல்ல - அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர் போப் ஆண்டவர் அவர்கள்.

அர்ஜென்டினா நாட்டில் 1936-ஆம் ஆண்டு அவர் பிறந்தார். 22 வயதிலேயே இயேசு சபையில் தன்னை இணைத்துக்கொண்டார். 1969-ஆம் ஆண்டு பாதிரியாராக வாழ்க்கையைத் தொடங்கினார். 2013-ஆம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் என்ற சிறப்புக்குரியவர் அவர். அன்பு - அமைதி - இரக்கம் - எளிமை - ஆகியவற்றின் அடையாளமாக போப் பிரான்சிஸ் அவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்.எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதை விமர்சித்திருக்கிறார். தனக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை கூட அவர் தவிர்த்திருக்கிறார்.

சில நேரங்களில் வாடிகன் ஊழியர்களோடு அமர்ந்து உணவு அருந்தியிருக்கிறார். உலக அமைதி - மனித நேயம் - மனித உரிமைகள் - சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து அக்கறை உள்ளவராகவும் இருந்திருக்கிறார். முற்போக்குக் கொள்கைகளோடு கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்கள். அகதிகள் பிரச்சினை பற்றியும் பேசினார். புலம்பெயர்ந்த மக்களின் உரிமைகளுக்காகவும் பேசினார். இவை எல்லாம் மற்றவர்கள் பேசத் தயங்கிய, தயங்கும் செய்திகள் ஆகும். வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கினார். மரண தண்டனைகளை எல்லா சூழலிலும் ஏற்க முடியாது என்று சொன்னார். அணு ஆயுதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அந்த வகையில் முற்போக்குக் குரலாக அவர் இருந்திருக்கிறார்.

புறக்கணிக்கப் பட்டவர்களுக்கான அரவணைப்பையும் - நீதியையும் வழங்குவதற்கு, அவரே முன் உதாரணமாக இருந்திருக்கிறார். கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கே சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

உலக அறநெறிகளைப் பேசுபவராக மட்டுமல்லாமல் - அதற்காகச் செயல்பட்டு – தானும் அப்படி நடந்து காட்டுபவராக போப் ஆண்டவர் அவர்கள் இருந்திருக்கிறார். 2015-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆவணத்தை போப் பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

பூமி மற்றும் அதன் வளங்களை காப்பாற்ற வேண்டியது மதக் கடமை என்றும், இயற்கையை அழிப்பது மனிதர்களுக்கு எதிரான பாவம் என்றும் அதில் குறிப்பிட்டார். சமயத்தின் வழியே இயற்கைப் பாதுகாப்பை வலியுறுத்திய மாபெரும் செயலைச் செய்தவர் போப் பிரான்சிஸ் அவர்கள்.

மதங்களைக் கடந்த தன்மை - அனைத்து மதங்களையும் ஒன்றாகக் கருதும் தன்மை அவருக்கு இருந்தது. மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுதந்தது.

பல்வேறு மதத் தலைவர்களைச் சந்தித்தார். அதை தனது வழக்கமாகவே வைத்துக்கொண்டார். ஒரு சில நாடுகளில் இரு மதத்தினருக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அதை அவர் சமாதானம் செய்திருக்கிறார். இசுலாமிய நாடுகளுக்கு பயணம் செய்ததன் மூலமாக அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தார். அன்பு தான் மதங்களின் அடையாளமாக மாறவேண்டும் என்று கருதினார். தனது இறுதி ஈஸ்டர் உரையில் அவர் குறிப்பிட்ட சொற்களை இங்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்...

ஏழைகளுக்கு உதவுங்கள் - பசிக்கு எதிராகப் போராடுங்கள் - இவைதான் அமைதிக்கான ஆயுதங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவைதான் எதிர்காலத்தை கட்டமைக்கும் ஆயுதங்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். வெறுப்பை அன்பு வென்றுள்ளது -இருளை ஒளி வென்றுள்ளது - பொய்யை உண்மை வென்றுள்ளது –மன்னிப்பு, பழிவாங்குவதை வென்றுள்ளது.

உலகத்தில் நடக்கும் போர்கள் எல்லாம் நிறுத்தப்பட வேண்டும் என்று பேசினார். அந்த உரையைப் படிக்கும்போது, இன்னும் பல ஆண்டுகாலம் இருந்து நல்லிணக்கப் பணிகளை அவரால் முன்னெடுக்க முடியாமல் போனதே என்று நினைத்து நாமெல்லாம் வருத்தப்படுகிறோம். அடுத்த ஆண்டு அவர் இந்தியாவுக்கு வர இருந்த நிலையில் போப் அவர்கள் மறைந்தது கூடுதல் வருத்தமாக நமக்கெல்லாம் அமைந்திருக்கிறது.

அவர் மறைவுச் செய்தி பற்றி நான் கேள்விப்பட்டதும், உடனடியாக இரங்கல் அறிக்கை வெளியிட்டேன். தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினோம். இறுதி அஞ்சலிக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களையும் - சட்டமன்ற உறுப்பினர் அருமை சகோதரர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்களையும் நான் அனுப்பி வைத்தேன். அவர்கள் இரண்டு பேரும் நமது அரசின் சார்பாக அஞ்சலியை செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.

அன்பின் அடையாளமாக - அமைதியின் அடையாளமாக - போப் அவர்களின் புகழ் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும். வன்முறைக்கும், வெறுப்புணர்வுக்கும், போர்களுக்கும் எதிரான அவரது குரல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். மாபெரும் மாற்றங்களை முன்னெடுத்த மாமனிதர் - போப் ஆண்டவர் புகழ் வாழ்க! அவர் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்! அன்பே எங்கும் நிறையட்டும்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

banner

Related Stories

Related Stories