Tamilnadu

கொளத்தூர் - ரூ.70.69 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் : அதன் விவரம் வருமாறு!

கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ரூ.70.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மூன்று வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.4.2025) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 40 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 6 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பெரியார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 40 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஜமாலியா லேன் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்குதல்

கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, குடியிருப்புகளை பார்வையிட்டார். மேலும், பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கினார்.

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய 128 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. முதலமைச்சர் அவர்களால் 11.6.2022 அன்று ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி,

128 குடும்பங்களுக்கு கருணைத் தொகையாக தலா ரூ.24,000 வீதம் மொத்தம் ரூ.30.72 இலட்சம் வழங்கினார். இத்திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் இரண்டு தொகுப்புகளாக 130 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் 23.04 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களுடன் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடியிருப்பும் 413 சதுர அடி கட்டுமான பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டப்பகுதியில் பழைய குடியிருப்புகளில் வாழ்ந்த 128 குடும்பங்களுக்கும், கூடுதலாக கட்டப்பட்டுள்ள 2 குடியிருப்புகள் சென்னை மாநகரில் வாழும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பின் மதிப்பு 17.72 இலட்சம் ரூபாயாகும்.

இத்திட்டப்பகுதியில் மழை நீர் கால்வாய்கள், கான்கீரிட் சாலைகள், தெரு விளக்குகள், மின்சார வசதி, கழிவு நீர்தேக்க தொட்டி, மின் தூக்கி, மின்னாக்கி, குடிநீர் வசதி, அங்கன்வாடி போன்ற வசதிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கபட்டுள்ளது. மேலும், குடியிருப்போர் நலச்சங்கள் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை நல்ல முறையில் பராமரிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கொளத்தூர், பந்தர் கார்டன் சென்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் விவரங்கள்

கொளத்தூர் தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மூலதன நிதியின் கீழ் 8 கோடியே 96 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள், பெயர்ப்பலகை பழுதுபார்க்கும் பணிகள், மழைநீருடன் வரப்பெறும் உபரிமண்ணை சேகரிக்கும் தொட்டிகள், வேகத்தடைகள் அமைக்கும் பணி, தியான மேடை மற்றும் பூங்கா வெளிப்புற நடைபாதை, விளையாட்டு மைதானங்களில் பாதுகாப்பு கேமரா பொருத்தும் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் சுற்றுச்சுவர், மழைநீரை அகற்ற குழாய் பதித்து மழைநீர் வடிகாலுடன் இணைக்கும் பணிகள், தகன மேடை மற்றும் புகைவெளியேற்றி ஆகியவற்றை பழுதுபார்த்து மேம்படுத்தும் பணிகள், பல்நோக்கு மையங்கள், உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடல் மேம்படுத்தும் பணிகள், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மேற்கூரையுடன் கூடிய நுழைவு வாயில் கட்டும் பணி, கிரிக்கெட் பயிற்சிக்கூடம், சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணிகள், புதிய உணவருந்தும் கூடம் கட்டும் பணிகள், பேருந்து நிழற்குடை பழுதுபார்க்கும் பணிகள், மாநகராட்சி பூங்காவில் நடைபாதை அமைக்கும் பணிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் பணிகள், மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் கூடுதல் அலுவலக அறைகள் கட்டும் பணிகள், விளையாட்டு மைதானத்தில் செயற்கை நீருற்று அமைக்கும் பணிகள் உள்ளிட்ட 63 பணிகள்;

திரு.வி.க. நகர் மண்டலத்தில் 3 கோடியே 75 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 40 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்களை மேம்படுத்தும் பணிகள் மற்றும் 2 புதிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் கட்டும் பணிகள்;

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 64 முதல் 70 வரை உள்ள வார்டுகளில் 196 மின்மாற்றிகளுக்கு 7 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மின்மாற்றி சுவர் (View Cutter) அமைக்கும் பணிகள்;

திரு.வி.க. நகர் மண்டலம், ராஜா தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பிற்கு அருகில் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் மற்றும் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் கட்டும் பணிகள்; என மொத்தம் 21 கோடியே 65 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூர், சிவானந்தா நகர் பகுதியில் 6 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் H2S வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய நவீன IOT மூலம் செயல்படுத்தக்கூடிய 5 எம்.எல்.டி. திறன் கொண்ட தானியங்கி கழிவுநீர் உந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் விவரங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், திரு.வி.க. மண்டலம், பேப்பர் மில்ஸ் சாலையில் 4 கோடியே 82 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி, 9 கோடியே 67 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணி மற்றும் சோமையா தெருவில் 4 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி, என மொத்தம் 18 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

பெரியார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல்

கொளத்தூர், பெரியார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக கரூர் வைஸ்யா வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 40 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயிர் காக்கும் கருவிகள் பொருத்திய அதிநவீன அவசர ஊர்தி (ACLS Ambulance) மற்றும் பேட்டரியால் இயங்கும் 2 வாகனங்களின் சேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜி.கே.எம். காலனியில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள முதல்வர் கல்விச் சோலையை திறந்து வைத்தல்

கொளத்தூர், ஜி.கே.எம். காலனி 12-வது தெருவில் அமைந்துள்ள சென்னை தொடக்கப் பள்ளியின் 2-வது தளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் பலகை, மேஜைகள், நாற்காலிகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒரு வகுப்பறை, மூன்று வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாலை நேர சிறப்பு வகுப்பு மையமான “முதல்வர் கல்விச் சோலை”-யை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், முதல்வர் கல்விச் சோலை மையத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த 189 பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, மாவு அரவை இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

Also Read: ”இலங்கை தமிழர் முகாம்களில் கணினி வசதியுடன் கூடிய படிப்பகம்” : பேரவையில் அமைச்சர் நாசர் அறிவிப்பு!