Tamilnadu

HIV நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வைப்பு நிதி ரூ.25 கோடியாக உயர்வு : பேரவையில் அமைச்சர் தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசியது வருமாறு:-

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை இதுவரை தொடர்ந்து கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வரும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றாளர்கள் 446 பேர் இருக்கிறார்கள். இந்த 446 பயனாளிகளில், 364 பேருக்கு ஏற்கெனவே, அரசால் வழங்கப்படுகின்ற பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையின் மூலம் உழவர் பாதுகாப்புத் திட்ட விதிகளின்படி, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டம் எதுவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படுவதில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை HIV/AIDS தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1,57,908. HIV-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. கூட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கிற பயனாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 1,41,341. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருடைய வலியுறுத்தலுக்கேற்ப இன்றைக்கு இந்த கூட்டு மருத்துவ சிகிச்சை என்பது விரிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக நலத்துறையால் வழங்கப்படுகிற பாதுகாப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை முதியோருக்கான உதவித்தொகை ரூ.1000/-த்திலிருந்து ரூ.1200 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000/-த்திலிருந்து ரூ.1500/-ஆகவும், 75 விழுக்காடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2000 என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயர்த்தித் தந்து அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை ART (Anti-Retroviral Therapy) மையங்களில் 3372 பேரும், தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை ART (Anti-Retroviral Therapy) மையங்களில் 1224 பேரும் ஆக மொத்தம் 4596 பேர் HIV தொற்றாளர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின்கீழ் கூட்டு மருத்துவ சிகிச்சையின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இங்கே சொல்லியிருப்பதைபோல இந்த துறையின் சார்பில் பிரத்யேகமாக நிதியுதவி வழங்குகிற திட்டம் எதுவும் இல்லை என்றாலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2009ஆம் ஆண்டு எச்ஐவி/எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.5 கோடி வைப்பு நிதியாக தந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி வைத்தார்கள். அந்த நிதி தற்போது ரூ.25 கோடியாக உயர்ந்திருக்கிறது. ரூ.25 கோடியாக உயர்ந்திருக்கிற அந்த திட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவத்திற்கு 2024-25ஆம் ஆண்டில் மட்டும் 7618 குழந்தைகள் பயன்பெறுகிற வகையில் ரூ.1.89 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. உறுப்பினருடைய கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலைப் பெற்று எதிர்காலத்தில் அந்த குழந்தைகளுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்குகிற திட்டம் அமல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிறுபான்மையினர்களின் பாதுகாப்பு அரண் என்று கூறிக்கொள்ளும் அரசு என்று சொன்னார். உண்மையில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரசு இது என்பதை ஒட்டுமொத்த தமிழர்களும் உணர்வார்கள். அந்தவகையில் தென்காசியைப் பொறுத்தவரை ஒரு மருத்துவக்கல்லூரி வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவக்கல்லூரி கிடைக்கும்போது, இப்போது ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியாகத்தான் Cathlab என்று சொல்லக்கூடிய இருதய சிகிச்சை கருவிகளைப் பொருத்தி வருகிறோம். கடந்த ஆண்டு இரண்டு மருத்துவக்கல்லூரிகளில் வைக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு இரண்டு மருத்துவக்கல்லூரிகளில், எதிர்வரும் ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டதற்கு பிறகு தென்காசியில் ஒரு Cathlab வசதி ஏற்படுத்தித் தருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, சித்த மருத்துவர்கள், ஹோமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய அனைத்து மருத்துவர்களும் 100 சதவிகிதப் பணியிடங்களில் இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சொல்லியிருப்பதைப்போல, எதற்காக அங்கேயுள்ள மருத்துவமனையை மூடியிருக்கிறார்கள் என்கின்ற விவரத்தை விரைவில் கேட்டறிந்து, நாளைக்கு அவருக்கு சரியான பதில் வழங்கப்படும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு, ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்படும்போது 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரமுயருகிறது. அதுவே தாலுகா மருத்துவமனையாக மாற்றப்படுகிறபோது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கிற கிராம சுகாதார செவிலியர்கள் போன்ற பல்வேறு வசதிகள் அங்கிருந்து வெளியில் சென்றுவிடும் என்பது சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியும்.

இருந்தாலும், அவர்களுடைய கோரிக்கை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு புதிய கட்டிடங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்கள். புதிய கட்டிடங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, இந்த அரசு போறுப்பேற்றதற்கு பிறகு 1,400 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களைக் கட்டி தந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அவர் சொன்ன அந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் முன்னுரிமை அடிப்படையில் கட்டித் தருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்தியை திணிக்கக்கூடாது என்பது சட்ட உரிமை!” : கல்வியில் இந்தியை திணிப்பதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!