Tamilnadu

”இரட்டை வேடம் போடுவதில் அ.தி.மு.க-விற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று புளியந்தோப்பு நேரு நகரில் ’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ ஏழை எளிய மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,”திராவிட மாடல் அரசின் மீது பழி சுமத்த ஏதாவது கிடைக்காதா என்று இலவு காத்த கிளி போல் காத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இறந்தவர்களை வைத்து அவர் அரசியல் செய்வது கண்டனத்துக்குறியது. இதுபோன்ற தரம் தாழ்ந்த மலிவான அரசியல் செய்வதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திருச்செந்தூர் கோவிலில் எந்தவிதமான கூட்ட நெரிசலும் இல்லை. சுவாசப் பிரச்சனை காரணமாகவே தனது கணவர் உயிரிழந்தார் என அவரது மனைவி கூறியுள்ளார். இறந்தவர்களை வைத்து அவர் அரசியல் செய்ய வேண்டாம். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். தேவையில்லாமல் அவதூறுகளை பரப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளது அதிமுக.

தொட்டிலையும் ஆட்டுவோம் பிள்ளையையும் கிள்ளுவோம் என்பதுபோல் உள்ளது அதிமுகவின் நிலைபாடு. இரட்டை வேடம் போடுவதில் அ.தி.மு.கவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.31 கோடியில் 5 தங்கத்தேர்கள்... பக்தர்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு தகவல்!