Tamilnadu

”தேசியக் கல்விக் கொள்கையில் ஒளிந்திருக்கும் சதி இதுதான்” : தெள்ளத் தெளிவாக விளக்கி சொன்ன முரசொலி!

”தர்மேந்திர பிரதான் அவர்களே! நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல” என்று பொட்டில் அடித்தாற் போல் அவர்களுக்குப் புரிவது போலச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

“நாசகார நாக்பூர் தேசியக் கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” - என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முழங்கி இருக்கிறார்கள்.

அது என்ன நாக்பூர் திட்டம்?

பா.ஜ.க.வுக்கு இரண்டு தலைமைகள் இருக்கிறது. ஒன்று பா.ஜ.க. தலைமை. இன்னொன்று ஆர்.எஸ்.எஸ். தலைமை. ஆர்.எஸ்.எஸ். தலைமையை மீறி பா.ஜ.க. தலைமையால் எதுவும் செய்ய முடியாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் தான், பா.ஜ.க.வின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவார்கள். இத்தகைய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகம் நாக்பூரில் அமைந்திருக்கிறது.

சாதிப் பாகுபாட்டை முழுக்க முழுக்க நியாயப்படுத்தும் அமைப்பு இது. சாதிப் பிரிவு என்பதையே 'வர்ண வியாவஸ்தா' என்று சொல்லிக் கொள்வார்கள். ‘இது ஒரு சமூக அமைப்பு. சமூக ஏற்றத்தாழ்வல்ல. நான்கு சமூகப் பிரிவுகளும் அவரவர் சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலமாக கடவுளை வணங்கலாம் என்பதுதான் இதன் தத்துவம். இது ஏற்றத்தாழ்வு அல்ல' என்று சொன்னவர் கோல்வால்கர்.

சாதி அமைப்பு முறைதான் இந்தியாவைக் காப்பாற்றுவது என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். 'சாதி அமைப்பு முறையானது சமூகத்தில் ஒற்றுமையைக் காப்பதற்கே உதவி செய்திருக்கிறது' என்று சொன்னவர் கோல்வால்கர்.

சமஸ்கிருதம் தான் ஆட்சிமொழியாக வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பு இது. அமைப்பின் பெயர் முதல், துணை அமைப்புகள் அனைத்தும் சமஸ்கிருதப் பெயர்களாகத் தான் வைத்திருப்பார்கள். கோல்வால்கர் எழுதுகிறார்; “மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.” (As a solution to the problem of ‘Lingua franca,' till the time Sanskrit takes that place / we sha11 have to give priority to Hindi on the score of convenience) என்பதே அவர்களது கொள்கையாகும். ‘நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைகட்டாயப் பாட- மாக்க வேண்டும்' என்று ஜனசங்கம் தீர்மானம் போட்டுள்ளது. சமஸ்கிருத வளர்ச்சிக்காக பல்லாயிரம் கோடியை பா.ஜ.க. அரசு கொட்டிக் கொடுப்பதன் பின்னணி இதுதான்.

மாநில அரசுகளை மதிக்காமல் இன்றைய பிரதமர் மோடி நடந்து கொள்கிறார் என்றால், மாநிலங்கள் என பிரிக்கப்பட்டதே தவறு என்பதுதான் இவர்களது கொள்கையாகும். 'இந்தியாவில் மாநிலப் பிரிவினையே கூடாது; ஒன்றிய அர- சின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா முழுவதும் இருக்க வேண்டும்' என்பது தான் இவர்களின் திட்டம் ஆகும். 1954 ஆம் ஆண்டு மாநிலங்கள் புனரமைப்பு கமிஷன் பரிந்துரைகளைக் கடுமையாக எதிர்த்த கோல்வாக்கர், ‘இதனால் நாடே சிதறிப் போய்விடும்' என்றார். "மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்காமல், அதற்குப் பதிலாக, ஒரேஅரசாங்கமே இருக்க வேண்டும்; அதுவே இப்போது அவசியம்” என்றார் (A Unitary Government Prime need of the hour.' (ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு 26-1- 1956)

1951ஆம் ஆண்டு ஜனசங்க தேர்தல் அறிக்கையிலும், ஆர்.எஸ்.எஸ். வெளியீடான “its Cult” என்ற நூலிலும், 'தனித்தனி மாநிலங்கள் கூடாது' என்ற கருத்து வற்புறுத்தப்பட்டிருக்கிறது!

‘ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தைத் திருத்தி கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என்று பிரகடனப்படுத்துவோம்.' என்று 1957 ஆம் ஆண்டு பாரதீய ஜனசங்க தேர்தல் அறிக்கை சொல்கிறது. (இவை அனைத்தையும் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள விடுதலை இராசேந்திரன் எழுதிய ஆர். எஸ். எஸ். ஓர் அபாயம், ராவ்சாஹேப் கஸ்பே எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். ஒரு திரைவிலக்கம் ஆகிய நூல்களைப் பாருங்கள்)

1951ஆம் ஆண்டு ஜனசங்க தேர்தல் அறிக்கையிலும், ஆர்.எஸ்.எஸ். வெளியீடான “its Cult” என்ற நூலிலும், 'தனித்தனி மாநிலங்கள் கூடாது' என்ற கருத்து வற்புறுத்தப்பட்டிருக்கிறது!

இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவதற்காக ‘பாரதிய இதியாஸ் சங்காலன் யோஜனா' என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இந்த நாட்டின் பூர்வீக குடிகள் ஆரியர்கள் என்று வரலாற்றை மாற்றினார்கள். தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி இதைத்தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார். நாம் சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பேசும் போது, 'சிந்து சரஸ்வதி நாகரிகம்' என்று கதை விடுவது எல்லாம் இவர்கள் தயாரித்த கட்டுக்கதை வரலாறுகள் ஆகும். தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கு சமஸ்கிருதம் தான் மூலமொழி என்றே ஒரு வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்கள்.

இவை தான் பா.ஜ.க.வின் செயல்பாட்டில் பிரதிபலிக்கும்.

‘இந்தியாவுக்கு இனி குருகுலக் கல்விதான் தேவை, சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்' என்று கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியன்று ஆர். எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி சொல்லி பேசி இருக்கிறார். ‘கல்வி விஷயத்தில் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆங்கிலேயரின் கல்வி முறையை இந்தியா தழுவி இருக்கக் கூடாது. நாட்டு நலனுக்கு அக்கறை செலுத்தும் வகையில் குருகுலக் கல்வி முறைக்கு மாற வேண்டும். சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய். இந்தியாவைப் புரிந்து கொள்ள சமஸ்கிருதமே தேவை. அதனைக் கட்டாயமாக்க வேண்டும்” என்று கோவா மாநிலம் டோனாபவுலாவில் நடந்த நிகழ்ச்சியில் சுரேஷ் ஜோஷி பேசி இருக்கிறார். இதுதான் நாக்பூரின் திட்டம்.

அனைவரும் படிக்கக் கூடாது, படித்துவிடக் கூடாது என்பதுதான் இதற்குள் இருக்கும் நாசகாரச் சிந்தனை ஆகும். சிலரை மட்டும் படிக்க வைக்கவும், சிலரை அவர்களுக்கு சேவை செய்ய வைக்கவுமான சதிச் செயல்தான் இதற்குள் இருக்கிறது. இந்தி படிக்கலாமா, வேண்டாமா என்று இன்று விவாதங்கள் நடக்கிறது. 'இந்தியர்கள் அனைவரும் படிக்கலாமா? கூடாதா?' என்பதும் இதற்குள் நடக்கும் விவாதம் ஆகும். அதனால் தான் இதனை நாசகாரத் திட்டம் என்கிறோம்.

Also Read: “ஆணவ கொக்கரிப்பு.. இவ்வளவு அதிகாரம் யார் கொடுத்தது?” - ஒன்றிய அமைச்சரை வெளுத்து வாங்கிய முரசொலி!