Tamilnadu

”அமித்ஷாவை பற்றி தமிழ்நாட்டிற்கு நன்கு தெரியும்” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

”இந்தி திணிப்பை தமிழ்நாடு தடுத்து நிறுத்தி இரு மொழிக் கொள்கையை கொண்டு வந்த காரணத்தினால்தான், தாய் மொழி தமிழ் மொழியை நாம் காப்பாற்றி இருக்கின்றோம்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,”மக்களவை தொகுதி மறுசீரமப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட போகும் ஆபத்துகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டினுடைய எதிர்காலம் பாதிக்கும் என்பதால் இவ்விகாரத்தில் முதலமைச்சர் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதை எல்லோரும் அறிவோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதியை தர முடியாது என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே மிரட்டுகிறார். இவர்களின் அடுத்த வெளிப்பாடுதான் தொகுதி மறுசீரமைப்பு என்பது. அமையும் என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்து அதனால் தான் அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

தமிழ்நாடு முன்னேறி வந்திருப்பதற்கு காரணம் மக்கள் தொகையை பெருக்கத்தை கட்டுப்படுத்தியது ஒரு முக்கியமான காரணம். எனவே இந்த மக்கள் தொகை பெருக்கத்தை நாம் அன்றைக்கு கட்டுப்படுத்தியது போல பக்கத்தில் இருக்கின்ற தென் மாநிலங்களும் அதிகளவிற்கு முனைப்போடு செயல்பட்டு கட்டுப்படுத்தினார்கள். தொகுதி மறுசீரமைப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

ஏன் தமிழ்நாட்டில் மட்டும் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்று நீங்கள் எல்லோரும் கேட்கலாம் , எப்போது எல்லாம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான குரல் ஓங்கி வருகிறதோ அப்போது தமிழ்நாடு தான் எதையும் முன்னெடுக்கும். இந்தி திணிப்பை தமிழ்நாடு தடுத்து நிறுத்தி இரு மொழிக் கொள்கையை கொண்டு வந்த காரணத்தினால்தான், தாய்மொழியை தமிழ் மொழியை நாம் காப்பாற்றி இருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் மக்களவை தொகுதி குறையாது என அமித் ஷா கூறுகிறார். ஆனால் இவர்கள் பேச்சை நம்பவே முடியாது. தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் இவர் களைபற்றி நமக்கு தெரியாதா?. ஒரே இரவில் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னவர்கள்தானே இவர்கள். இவர்கள் சொல்வது ஒன்றாக இருக்கும். செயல் வேறுவிதமாக இருக்கும். இதைதான் தமிழ்நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்களே.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”நாட்டின் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” : இந்திரா நூயி பாராட்டு!