Tamilnadu
“தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை” - இருமொழிக் கொள்கை குறித்து சட்டப்பேரவையில் முழங்கிய அண்ணா!
இந்தியா ஒரு தேசம் அல்ல. அது பல மாநிலங்களின் ஒன்றியமே. Union of State என்பது தான் இந்திய அரசியல் சாசனம் சொல்லும் உண்மை. இதைத்தான் அரசியலமைப்பின் முகவுரையில் பறைசாற்றி இருக்கிறார். ஆனால் ஆளும் பாஜக அரசு அதிகாரத்திற்கு வரும்பொதெல்லாம், அரசியலமைப்பின் கூற்றுக்கு மாறாக, மொழிவழித் தேசிய இனங்களின் பாதுகாப்பிற்கும், அதன் தனித்தன்மைக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை பின்பற்றும் ஒன்றிய பாஜக அரசு, ஒரே நாடு - ஒரே மொழி என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியை நிர்வாக நீதியாகவும், கல்வியிலும், வேலையிலும் திணிக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கை மூலம் பிற மொழிவழி மாநிலங்களை அந்நியமாக்கும்.
இந்தியன் என்ற பொது உணர்வு அழிக்கப்பட்டு, தனி மொழி உணர்வு ஓங்கி ஒலிக்கும் நிலையே உருவாகும். இதனால் தனிநாடு கோரிக்கை மேலோங்கும் என்பதை ஒன்றிய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா போன்ற பல்வேறு சாதி, மத, இன, மொழி அடிப்படையில் அமைந்த ஒரு நாட்டில் அனைத்தும் சமமாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை மாண்பாகும். இந்திய அரசின் அறிக்கையின் படியே இந்தியாவில் தோராயமாக 1652 மொழிகளை பேசும் மக்கள் உள்ளனர். அவற்றில் 397 மொழிகள் இன்றும் உயிர்ப்புடன் மக்களால் பேசப்படும் மொழியாக இருக்கிறது. மேலும் ஒன்றிய அரசு அதில் 22 மொழிகளை அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளாக அறிவித்துள்ளது.
இதிலும் கூட சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழிக்கு அங்கீகாரம் இருக்கும் போது, சில லட்சம் மக்கள் பேசும் துளு மொழிக்கு அங்கீகாரம் இல்லை. ஒன்றிய அரசின் அலுவல் மொழி அங்கீகாரத்திலேயே மொழியில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்தசூழலில் தான் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் இந்தியை மட்டுமே முதன்மையாக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது, அதனால் தான் கல்வி வழியே மும்மொழிக் கொள்கையை புகுத்தப் பார்க்கிறார்கள். 2020ல் இந்தியாவில் மோடி ஆட்சியில் அறிமுகப்பட்ட புதிய கல்விக்கொள்கை மாநிலத்தின் சுயாட்சியை அழிக்கும் என்பதால் தமிழ்நாடு அதனை ஏற்க மறுகிறது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே அமலில் இருக்கும் போது மும்மொழி கொள்கை எதற்கு? இது மாநில மொழிகள் மீது தாக்குதல் நடத்தும் செயல் என்பதால் தமிழ்நாடு இதனை எதிர்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
1964ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பரவிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை, இந்தியுடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாகத் தொடரும்” என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின்னர் இந்தி எதிர்ப்புப்போராட்டம் தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்தது.
இந்தியை திணிக்க நினைத்ததால், 1967ல் தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து, பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.
“தமிழைப் பாடமொழியாக்க வேண்டும் எனக் கூறுவது இந்த நாட்டில்தான் தேவைப்படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலம்தான் பாடமொழியெனக் கூறவேண்டிய தேவை எழவில்லை. எந்த நாட்டிலும் இல்லாத விந்தை, இந்த நாட்டில்தான் இருக்கிறது” என தனது வருத்தை அண்ணா பதிவு செய்தார். அதுமட்டுமல்லாது தமிழைப் பயிற்றுமொழியாக்குவது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.
“இந்தி பேசாத மக்கள்மீது அம்மொழி திணிக்கப்படமாட்டாது என்று நேரு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற நடுவண் அரசு தயக்கம் காட்டி வந்ததால் 1967 நவம்பர் மாதம் முதல் தமிழ்நாட்டில் மாணவர்கள் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர்.
அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா, மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்கள் விருப்பப்படியே 1968 ஜனவரி 23-ம் நாள் தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டித் ”தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை” என்று அறிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் மட்டும் கற்பிக்கப்படும் என்று இருமொழிக் கொள்கையை அறிவித்து நடைமுறைப்படுத்தினார். தமிழைப் பயிற்று மொழியாக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டுமெனில், கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் தயங்கக் கூடாது என்று பேரவையிலேயே பகிரங்கமாக பேசினார் அண்ணா.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?