Tamilnadu

14 வகை பாக்டீரியாக்கள்... “மாட்டு கோமியம் குடிச்சா இதான் நிலைமை..” - இந்திய கால்நடை ஆய்வு எச்சரிக்கை !

இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி வந்ததில் இருந்தே, இந்துத்துவ சிந்தனைகளை மக்கள் மீது திணிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் முதற்படியாக 'மாடு'. மாட்டை வைத்து அரசியல் செய்வது என்றால் அது பா.ஜ.க. மட்டும்தான். மாட்டை கடவுளாக பாவிக்க வேண்டும், மாட்டு சாணி மருத்துவ குணம் நிறைந்தது, கோமியத்தை குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் என பல மூட நம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைக்க முயன்று வருகிறது.

இப்படி இருக்கையில், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவ கும்பல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது மட்டுமின்றி, மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தேச விரோதியாக கருதி வெறுப்பு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அந்த கும்பலை, பலரும் மதிப்பதே இல்லை. இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுத்து செல்கின்றனர். மாடு சார்ந்த எந்த விஷயங்களையும் அவர்கள் புனிதமாக கருதுவதால், மற்றவர்களை கொடுமை படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக மாட்டுக்கறி கொண்டு செல்லும் கும்பலை பிடித்து அடித்து கொடுமையாக தாக்குவது, அவர்களை கொலை செய்வது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி மருத்துவ ஆலோசனை என்ற பெயரிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளது பா.ஜ.க. அதாவது மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என எந்த அடிப்படைச் சான்றும் இல்லாத நிலையில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரும் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் மாட்டு பொங்கலன்று நடத்தப்பட்ட விழா ஒன்றில் கலந்துகொண்ட சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, தனது தந்தை மாட்டு கோமியம் குடித்த 15 நிமிடங்களில் காய்ச்சல் குணமானதாகவும், மாட்டு கோமியத்தில் Anti Bacterial, Anti Fungal, Anti Inflammatory போன்ற மருத்துவ குணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு ஐஐடி இயக்குநர் இவ்வாறு கூறியுள்ளது தொடர்பான வீடியோ வைரலாகி கண்டனங்களை எழுப்பியுள்ள நிலையில், கோமியத்தில் நோயெதிர்ப்பு சக்தி போன்ற மருத்துவ இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாவும், Nature உள்ளிட்ட ஜர்னல்களில் ஆய்வறிக்கைகள் நிறுவியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாட்டு கோமியத்தில் 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், அதனை நேரடியாக மனிதன் குடித்தால் பல விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) கடந்த 2023-ம் ஆண்டு தெரிவித்துள்ள செய்தி மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறித்த.

அதாவது 2023-ம் ஆண்டு, மாட்டு கோமியம் குறித்து இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த போஜ் ராஜ் சிங் தலைமையில் சில பிஎச்.டி மாணவர்கள் கொண்ட குழு ஆய்வு நடத்தியது. அதில் மாட்டு கோமியத்தில் மனிதர்கள் உடல்நலத்துக்கு நல்லது அல்ல என்றும், அதிலிருக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் மனிதர்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் எனவும் கண்டறியப்பட்டது.

மேலும் இந்த பாக்டீரியாக்கள் மனித உடலினுள் சென்றால், அது வயிற்றில் தொற்று மற்றும் வேறு சில பிரச்னைகளை உருவாக்கும் என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் இனி மாட்டு சாணம், கோமியம் என மனிதர்கள் உண்டால் அவர்களுக்கு எந்த நோய் வேண்டுமானாலும் வரக்கூடும் என்பதே நிரூபணம் ஆகியுள்ளது.

மாட்டு கோமியம் மருத்துவ ரீதியாக மனித உடலில் எவ்வாறு வினையாற்றும் என்ற் விரிவான ஆய்வு இதுவரை செய்யப்படவில்லை. மேலும் அதை குடித்தால் மனிதனின் உடலுக்கு பெரும் ஆபத்து வரக்கூடும் என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) தெரிவித்துள்ளது. இப்படி இருக்கையில் ஒரு ஐஐடி இயக்குநர் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை இப்படி பரப்புவது மக்கள் உயிருக்கே ஆபத்தில் முடியும் என்று பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கோமியம் விவகாரம்: “மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய வேண்டும்..” -IIT இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்!