Tamilnadu
கல்வி நிறுவனங்களில் அதிகரித்த அருந்ததிய மாணவர்கள் பிரதிநிதித்துவம் - தமிழ்நாடு அரசு பெருமிதம் !
அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் உயர் கல்வி நிறுவனங்களான மருத்துவம், பொறியியல், சட்டம், கலைக் கல்லூரிகளில் அருந்ததியர் அதிக இடங்கள் பெற்று வாழ்வில் முன்னேற்றம் கண்டு வருவதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் :
இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
ஆதிதிராவிடர்களில் அருந்ததியினர் சமூக மக்கள் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி; ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டுவரும். 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் குழு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்டது. அந்த ஒரு நபர் குழு 2008 நவம்பரில் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டில் வாழும் அருந்ததியினருக்கு ஆதிதிராவிடருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிட 27.11.2008 அன்று கூடிய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்தது. அந்த முடிவின்படி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
2009-ஆம் ஆண்டில் அருந்ததியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட இருந்த சூழ்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனியார் மருத்துவமனையில் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றிய அருந்ததியர் இடஒதுக்கீடு சட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வந்த வேளையில் அருந்ததியர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் முன்மொழிந்தார்கள். அப்பொழுது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கையினால் எழுதி சமுதாயத்தின் கடைக்கோடியில் மிகமிகமிகப் பின் தங்கிய நிலையிலிருந்த அருந்ததியின சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட வேண்டிய மசோதா தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் பேரவையில் முன்மொழியப்படுகிறது. அந்த மசோதாவுக்கு நான் நேரடியாக அவைக்கு வந்து முன்மொழிந்ததாகக் கருதி அனைவரும் ஒப்புதல் வழங்கி மசோதாவை நிறைவேற்றித்தர அன்புடன் வேண்டுகிறேன் என்று உருக்கமான முறையில் ஒரு வேண்டுகோளை அனுப்பியிருந்தார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அந்த வேண்டுகோளை ஏற்றுப் பேரவையில் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக "தமிழ்நாடு அருந்ததியர்கள் (தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களை மற்றும் அரசின்கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளைப் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள்ளாகத் தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம்” 26.2.2009 அன்று நிறைவேற்றப்பட்டது. 29.4.2009 அன்று இது தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக, 2009-2010இல் அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த 56 மாணவ மாணவியர் மருத்துவக் கல்லூரிகளிலும் 1,165 மாணவ மாணவியர் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து, மொத்தம் 1,221 பேர் பயன் பெற்றனர். 2010-2011இல் இந்த எண்ணிக்கை மருத்துவக் கல்லூரிகளில் 87 என்றும், பொறியியல் கல்லூரிகளில் 3,414 என்றும், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 779 பேர் என்றும், கலைக்கல்லூரிகளில் 5,319 பேர் என்றும், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 147 பேர் என்றும், பள்ளிகளில் 42,269 பேர் என்றும் மொத்தம் 52,015 என்றும் அருந்ததிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
முத்தமிழறிஞர் கலைஞர் அருந்ததிய மாணவ மாணவியர்க்கு அளித்த நிதியுதவி
2009-2010இல் முதன்முதலாக அருந்ததியர்க்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து பயனடைந்த அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் "பெண் சிங்கம்" திரைப்படத்திற்குத் தாம் கதை வசனம் எழுதி, அதற்கு ஊதியமாகக் கிடைத்த 50 இலட்ச ரூபாயையும், தம் சொந்தப் பணத்திலிருந்து மேலும் 11 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து; மொத்தம் 61 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயை இந்த 1,221 பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி வளர்ச்சி நிதியாக 5.12.2009 அன்று வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும்- உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு
இந்நிலையில், அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வந்தனர். அந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2024 ஆகஸ்ட் திங்களில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் எனத் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பு திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் பெற்றுள்ள வெற்றிக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான பரிசு; ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளது” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்கள்.
2009 சட்டத்திற்குப் பிறகு அரசு கலைக் கல்லூரிகளில் அருந்ததியர் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதைக் காட்டும் கூடுதல் விவரங்கள்
தமிழ்நாடு அருந்ததியர் இட ஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக, மாநிலம் முழுவதும் அருந்ததியினர் சமூகத்தைச் சார்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட சிறப்புச் சட்டம், பட்டியலினத்தவர்களுக்கான 18% இட ஒதுக்கீட்டிலிருந்து அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீட்டை வழங்கியது. இதன் மூலம், கடந்த காலங்களை விட அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்காத பகுதிகளிலும் கூட இந்த அதிகரிப்பு தெளிவாகத் தெரிகிறது.
உதாரணமாக, கரூர் மாவட்டம் தான்தோணிமலையில் ஏறத்தாழ 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில், 1994-95 ஆம் ஆண்டில் 53 என்ற குறைந்த எண்ணிக்கையிலிருந்த அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை, 2008-09 ஆம் ஆண்டில் 98 ஆக உயர்ந்தது.
தமிழ்நாடு அருந்ததியர் இட ஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மூன்று மாணவர்களின் ஓரளவு அதிகரிப்பு பதிவாகியிருந்தாலும், அடுத்த ஆண்டே (2010-11) சேர்க்கை 234 ஆக உயர்ந்தது. அடுத்த 14 ஆண்டுகளில், அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் தலா 410 ஆக உயர்ந்தது. 1993-94 முதல் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 5,112 அருந்ததியர் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 4,077 ஆகும்.
இது ஒன்றும் தனித்த உதாரணம் அல்ல, புதுக்கோட்டையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியை உதாரணத்தை எடுத்துக் கொண்டால் 1993 மற்றும் 2008க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அதிகபட்சமாக ஐந்து அருந்ததியர் மாணவிகளே சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, 2014-2015-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை இரட்டை இலக்கங்களைத் தொட்டது. மேலும், அதிகபட்சமாக 2020-21 இல் 19 மாணவிகள் சேர்க்கப்பட்டனர்.
மற்றொரு உதாரணம், சென்னையில் உள்ள நந்தனம் கல்லூரி. அங்கு 1993 மற்றும் 2008க்கு இடைப்பட்ட 16 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்திலிருந்த அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை, அதிகபட்சமாக 2008ம் ஆண்டு அதிகபட்சமாக 19 ஆக உயர்ந்திருந்தது. 2009க்கு பிறகு, இந்த நிலை மாறியது. மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கத்திலிருந்த 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளைத் தவிர, மற்ற ஆண்டுகளின் அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்தது. அதிகபட்சமாக 2014 இல் 39 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
கலைக் கல்லூரிகளில் உயர்ந்த அருந்ததியின மாணவர் சேர்க்கை
அருந்ததியர்கள் அதிக அளவில் வசிக்கும் மாவட்டங்களில் உள் ஒதுக்கீட்டிற்கான வரவேற்பு மற்ற பகுதிகளை விடச் சிறப்பாக இருந்து வருகிறது. நாமக்கல்லில் 56 ஆண்டுகள் பழமையான நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 1993 மற்றும் 2009க்கு இடையிலான வருடாந்திர சேர்க்கை 1996-1997 இல் 2 என்ற நிலையிலிருந்து, 2008-2009 இல் 32 வரை உயர்ந்தது. இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட்டபின், அருந்ததியர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக 2020-21 இல் 131 ஆக இருந்தது. அதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு பழமையான அரசு கல்லூரியான இராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில், 2011-12 முதல் எஸ்சி (அருந்ததியர்) மாணவர் சேர்க்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. 2023-24 இல் 316 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த விவரங்கள் எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் 2009-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய அருந்ததியினருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் சமத்துவத்தை நோக்கித் தமிழ்நாட்டை வழிநடத்தும் திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியை வெளிப்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!