Tamilnadu

”இந்த கறை வரலாற்றில் இருந்து மறையாது” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்தியா​வின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் ​சிங் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்ச்சியை தனி இடத்தில் நடத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு மறுத்து பொதுவான மயானத்திலேயே, 2 முறை இந்திய நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்ச்சியை நடத்தி அவரை அவமதித்துள்ளது ஒன்றிய அரசு. இந்த அவமதிப்பு செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கறை வரலாற்றில் இருந்து மறையாது என கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்ச்சிக்கு, அவரது குடும்பத்தினர் கேட்ட இடத்தை பா.ஜ.க அரசு மறுத்துள்ளது. இந்த முடிவு மன்மோகன் சிங்கின் உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை நேரடியாக அவமதிக்கும் செயலாகும். அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்ட முயற்சி.

டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது மற்றும் மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டது. ஒரு அரசியல்வாதியை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது” என கண்டித்துள்ளார்.

Also Read: ”மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வை அவமதித்த ஒன்றிய அரசு” : ராகுல் காந்தி கண்டனம்!