Tamilnadu
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிக்கு இரவில் பாலியல் தொல்லை : ஒருவர் அதிரடி கைது !
சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், நேற்று இரவு தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவி மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவி ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், இரவு காவலாளி, சிசிடிவி உள்ளிட்டவைகளை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், காவல்துறையினரின் விசாரணைக்கு பல்கலை. நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், மாணவ - மாணவிகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அப்பல்கலை. பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கை வருமாறு :
சென்னை அண்ணா பல்கலைக்கழக, கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மேற்படி புகாரில், மாணவி தனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தின் பின்புறம் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் இருவரையும் அச்சுறுத்தியதாகவும் பின்னர் அதே நபர்கள் தன்னுடைய நண்பரை தாக்கிவிட்டு தன்னை பாலியல் சீண்டலுக்கு முயன்றதாக மாணவி காவல் நிலையத்தில் 24.12.2024 அன்று புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் உரிய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில், ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலையக் குழுவினருடன் வழக்கை தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார்க் குழுவினருக்கும் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை உயர் அலுவலர்கள் அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!