Tamilnadu

“தமிழ்நாடு ஒரு நாள் உலகின் செஸ் தலைநகராக உயரும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியானது சிங்கப்பூரில் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி கடந்த டிச.12-ம் தேதி நிறைவடைந்தது. 14 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டித் தொடரில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் குகேஷும், சீன வீரர் டிங் லிரனும் நேருக்கு நேர் போட்டியிட்டனர். இதில் குகேஷ் வெற்றி பெற்று, முதல் இளம் உலக சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார்.

தற்போது இளம் சாம்பியன் குகேஷுக்கு வாழ்த்து குவிந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்ததோடு, அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிச.17) சென்னை, கலைவாணர் அரங்கில் இளம் செஸ் சாம்பியன் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாத ஆனந்த், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளம் செஸ் சாம்பியன் குகேஷுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவருக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கினார்.

இதற்கு முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 11 வயதில் ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் தனது வெற்றிக் கணக்கைத் துவங்கிய தம்பி குகேஷ், இன்றைக்கு, 18 வது வயதில் சீனியர் சாம்பியன்ஷிப்பிலும் சாதித்துக் காட்டி இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வருமாறு :

“தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று இன்றைக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும், இந்திய ஒன்றியத்தையுமே, உலகமே திரும்பிப் பார்க்கின்ற வகையில், சாதனை படைத்துள்ள தம்பி குகேஷிற்கு பரிசுத் தொகை வழங்கி, பாராட்டுகின்ற விழாவில் வரவேற்புரை ஆற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.

தன்னுடைய 18-ஆவது வயதில் 18 ஆவது உலக செஸ் சாம்பியன் என்று உயர்ந்து நிற்கும் தம்பி குகேஷைப் பார்த்து ஒட்டு மொத்த இந்தியாவும், தமிழ்நாடும் இன்றைக்கு பெருமை கொள்கின்றது. உலகளவில், செஸ் என்றால், சென்னை. சென்னை என்றால், செஸ் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தம்பி குகேஷின் சாதனை அமைந்திருக்கின்றது.

தம்பி குகேஷின் திறமையை அவர்களுடைய பெற்றோர் இளம் வயதிலேயே கண்டறிந்து, அவரை ஊக்குவித்து, இன்றைக்கு இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் அந்த அர்ப்பணிப்புக்கு இந்த நேரத்தில் நாம் அனைவரும் நம்முடைய கைத்தட்டல் மூலம் நமது நன்றியை சொல்வோம்.

எப்படி குகேஷின் சாதனையைக் கண்டு அவருடைய பெற்றோர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கின்றார்களோ, அதே உணர்வோடு தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய திராவிட மாடல் அரசும் இன்றைக்கு மகிழ்ச்சியோடு இருக்கின்றது.

நேற்று கூட விமான நிலையத்தில் இருந்து அவர் திரும்பிய போது, வழிநெடுக நம்முடைய சென்னை மக்கள் அவருக்கு ஒரு சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கின்றார்கள். அவரின் சாதனையை, தமிழ்நாடு தன்னுடைய சாதனையாக இன்றைக்கு கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

சென்னை செஸ் மாஸ்டர்ஸ் போட்டியை சென்ற வருடம் நடத்திய போது, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குச் செல்லும் முன்பே தம்பி குகேஷ் அவர்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார்கள். தம்பி குகேஷோ, எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாத மாபெரும் ஒரு வெற்றியை நமக்காக பெற்று வந்திருக்கின்றார்.

அதனால் தான் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருந்த போது, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில், பாராட்டோடு சேர்த்து உடனடியாக பரிசுத் தொகையையும் உடனே அறிவித்தார்கள்.

11 வயதில் ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் தனது வெற்றிக் கணக்கைத் துவங்கிய தம்பி குகேஷ், இன்றைக்கு, 18 வது வயதில் சீனியர் சாம்பியன்ஷிப்பிலும் சாதித்துக் காட்டி இருக்கின்றார். அவர் இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கட்டும். அவருக்கு நம்முடைய கழக அரசும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் என்றென்றும் துணை நிற்பார்கள். அவருடைய வெற்றி தொடரட்டும்.

கிரிக்கெட் எப்படி பட்டிதொட்டி எங்கும் இன்றைக்கு சென்று சேர்ந்திருக்கின்றதோ, அதே போல, தம்பி குகேஷின் வெற்றி செஸ் போட்டியையும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்க்கும் என்பது உறுதியாகும். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல நூறு கிராண்ட் மாஸ்டர்கள் நம்முடைய கிராமப்புறங்களில் இருந்து வருவார்கள். தமிழ்நாடு ஒரு நாள் உலகின் செஸ் தலைநகராக உயரட்டும். அதற்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

அத்தகைய சாதனை பயணத்தை நோக்கி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் அவர்களை இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சிக்கு வருக வருகவென வரவேற்கின்றேன். மேலும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் வருக வருகவென வரவேற்கின்றேன்.

நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் பல புதிய முன்னெடுப்புகளுக்கு காரணமாகத் திகழும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் அவர்களையும், தமிழ்நாடு பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்த அயராது உழைத்து வரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ் அவர்களையும், தமிழ்நாடு அரசின் அனைத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகளையும் வருக வருகவென வரவேற்கின்றேன்.

உலக அளவிலான செஸ் போட்டிகளில் சாதனை எனும் தொடர் ஓட்டத்தில் தான் ஏந்தி வந்த ஜோதியை, அடுத்தடுத்த இளம் தலைமுறையினரின் கைகளில் ஒப்படைத்து, அவர்களின் வெற்றியில் மனம் மகிழும் அருமை சகோதரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களையும் வருக, வருக என்று வரவேற்கின்றேன்.

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் அவர்களையும், இந்தியாவின் முதல் International Master Manueal Aaron அவர்களையும், குகேஷின் கனவை நனவாக்க, தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குகேஷின் பெற்றோர்கள் ரஜினிகாந்த் – திருமதி பத்மா குமாரி அவர்களையும், குகேஷின் குடும்பத்தினரையும், நண்பர்களையும், பயிற்சியாளர்களையும் வருக, வருக என்று வரவேற்கின்றேன்.

வேலம்மாள் பள்ளியின் மாணவ, மாணவிகளையும், இங்கே வருகை தந்துள்ள ஏராளமான செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் மற்றும் சர்வதேச மாஸ்டர்ஸ்களையும், எதிர்கால வீரர்களான என்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான SDAT மாணவ, மாணவியர்களையும் வருக, வருக என்று வரவேற்கின்றேன்.

தமிழ்நாடு செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளையும், செஸ் ஆர்வலர்களையும், எந்நேரமும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் SDAT அலுவலர்களையும், பணியாளர்களையும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களையும், உங்கள் அத்தனைப் பேரையும், மீண்டும் வருக வருக வருகவென வரவேற்று மகிழ்கிறேன்” என்றார்.

Also Read: “ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!