Tamilnadu

Orange Alert : மோசமான வானிலை... தரையிரக்க முடியாத விமானம் - சென்னைக்கு வரவேண்டிய விமான சேவைகள் பாதிப்பு!

தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு (டிச.11,12) ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பனி மூட்டமும் ஒரு சில இடங்களில் அதிகளவில் காணப்படுகிறது. இந்த சூழலில் இன்று (டிச.11) சென்னையில் மழை தொடங்கியுள்ள நிலையில், தற்போது மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானம், மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாததால், பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேலும் ஒரு சில விமானங்களும் தாமதமாக வரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இன்று காலை 10 மணி அளவில், டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். விமானம் சென்னையில் தரையிறங்க நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியது.

லேசான சூறைக்காற்றுடன் மழையும் பெய்து கொண்டு இருந்தது. இதை அடுத்து இண்டிகோ விமானம், இந்த மோசமான வானிலையில் சென்னையில் தரையிறங்குவது பாதுகாப்பானது இல்லை என்று, விமானி கருதியதால், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். இதை அடுத்து விமானத்தை பெங்களூருக்கு திருப்பிச் செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்காமல், பெங்களூருக்கு திரும்பி சென்றது. இந்த விமானம் வானிலை சீரடைந்த பின்பு சென்னைக்கு திரும்பி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், வழக்கமாக காலை 10 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் காலை 10:45 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக, பெங்களூருக்கு திரும்பி சென்று விட்டதால், சென்னையில் இருந்து டெல்லிக்கு 10:45 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இன்று பகல் ஒரு மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் இருந்து இந்த விமானத்தில் டெல்லிக்கு செல்ல இருந்த 148 பயணிகள் சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். அதேபோல் மங்களூவில் இருந்து இன்று காலை 10:40 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக, இன்று காலை 11:40 மணிக்கு, மங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் (டிச. 11,12) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படாத மோடி அரசு” : தி.மு.க MP ராஜேஷ்குமார் குற்றச்சாட்டு!