Tamilnadu

”தி.மு.க கூட்டணியில் உறுதியாக உள்ளோம்; அம்பேத்கரை விழுங்கப் பார்க்கிறார்கள்” : தொல்.திருமாவளவன் பேச்சு!

சென்னையில் Iconoclast புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய தொல்.திருமாவளவன்," எங்களை மீட்க வந்த மீட்பர் என்று மட்டுமே புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு அளவுகோலாகக் கொண்டு அணுகக் கூடாது. அவர் முன்வைத்த அரசியல், கருத்தியல், பங்களிப்புகள் எத்தகையது என்பதை அணுகுவதில் இருந்துதான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான மரியாதையாகும்.

இன்று அம்பேத்கர் பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஏன் சங்பரிவார்கள் கூட கொண்டாடுகிறார்கள். அம்பேத்கரை இந்துத்துவ தலைவராக அடையாளப்படுத்தி புத்தகங்களை எழுதி வெளியிடுகிறார்கள். தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் தலித்துகள் இன்று பா.ஜ.கவை ஆதரிக்கும் நிலை உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் பா.ஜ.கவை காலூன்ற விடாமல் தடுப்பதில் வி.சி.கவின் பங்களிப்பு மகத்தானது. ஏனெனில் நமக்கு கொள்கையில் தெளிவு இருக்கிறது.

தற்காலிகமான வளர்ச்சிக்காக, தற்காலிகமான புகழுக்காக, தற்காலிகமான அதிகாரத்துக்காக அம்பேத்கரின் பாதையை விட்டு நாம் வழுவிவிட முடியாது.

பெரியாரை அவர்கள் நேரடியாக எதிரியென அடையாளம் காட்ட முடிகிறது. அம்பேத்கரை அவர்களால் அப்படி அடையாளம் காட்ட முடியவில்லை. அம்பேத்கரை தங்களுடைய மதிப்புக்குரியவர் என அவர்கள் காட்டுவது ஆபத்தானது. அம்பேத்கரை விழுங்கி, செரிக்கப் பார்க்கிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவா நாங்கள் இயக்கம் வைத்திருக்கிறோம். எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். தெளிவாக இருக்கிறோம். நாங்கள் உறுதியாக இருப்பதால் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை. எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை. கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: நாடு முழுவதும் 93 அஞ்சல் அலுவலகங்களை மூட ஒன்றிய அரசு திட்டம் : சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு !