
"முக்கடல் சூழும் குமரி முனையில், முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், “தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் 'குறள் வாரம்' கொண்டாடப்படும் எனவும் தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்” எனவும் அறிவிக்கப்பட்டது.
மேற்கண்ட அறிவிப்பினை செயற்படுத்திடும்பொருட்டு, 2026ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் “குறள் வாரவிழா” கொண்டாடிட ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வகையில், சேலம், திருச்சிராப்பள்ளி, தேனி, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் திருக்குறள் நாட்டிய நாடகம் / இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஓவியம்/குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர், வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியம், படத்தொகுப்புப் போட்டி நடைபெறவுள்ளது. மதுரை, ஈரோடு, நாமக்கல், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பார் போற்றும் பட்டிமன்ற நடுவர்கள் தலைமையில் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. சென்னை, வள்ளுவர் கோட்டத்திலும், மெரினா கடற்கரையிலும் திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழோசை நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளது. திருப்பூரில் 21.01.2026 புதன்கிழமையன்று அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆசிரியர்கள் பெரும் அளவில் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு (ம) குறள் வினாடி-வினா நிகழ்ச்சிகள் மாவட்ட நிருவாக ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, தமிழ் மொழிக்கென்று முதன்முறையாக ஆண்டுதோறும் நடத்தப்பெற்றுவரும் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற 1500 மாணவர்கள் கலந்து கொள்ளும் குறள் மாணவர் மாநாடு கன்னியாகுமரியில் 23.01.2026 மற்றும் 24.01.2026 ஆகிய இரு நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளன.
“திருக்குறள் திருவிழா தமிழ்மக்களுக்கானத் தெவிட்டாதப் பெருவிழா“ என்ற பெருமிதத்துடன் குறள் வாரம் நிகழ்வுகளுக்கென தயாரிக்கப்பட்டுள்ள சிறப்புக் காணொலியையும், நிகழ்வுகளுக்கானப் பதாகையினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.01.2026) முகாம் அலுவலகத்தில் வெளியிட்டார்.








