Tamilnadu

”மாற்றுத்திறனாளிகளின் சவால்களைக் களைவதே நம் கடமை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நடந்து வருகிறது.

குறிப்பாக,மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு விழுக்காடு இடஒதுக்கீட்டின்கீழ், அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதனை பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்தும் 92 மையங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உயர்கல்வி பயிலும், 1000 பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில், 1 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.UPSC, TNPSC நடத்தும் தொகுதி 1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு முதன்மை தேர்வு எழுத தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி பல சிறப்பான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் சவால்களைக் களைவதே நம் கடமை என உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருளாக அறிவித்துள்ளது!

அந்த வகையில், மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது நமது DravidianModel அரசு. சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை” என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாடு தண்ணீரில் தத்தளிக்கும் போது திரைப்படம் பார்க்கிறார் பிரதமர் மோடி!” : மாணிக்கம் தாகூர் கண்டனம்!