Tamilnadu

”தமிழ்நாடு மீது அக்கறை இருந்தால் பழனிசாமி இதை செய்ய வேண்டும்” : அமைச்சர் சேகர்பாபு சொல்வது என்ன?

முன்னறிவிப்போடுதான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,”50ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் 6 நாட்கள் போக்கு காட்டி கரையை கடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் போர்கால அடிப்படையில் எடுத்த நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னையில் 13 செ.மீ அளவிற்கு மழை கொட்டியதால் தண்ணீர் தேங்கியது. இதுவும் மணி நேரங்களிலேயே வடிந்துவிட்டது. இதற்கு திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான் காரணம். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு எல்லாம் சென்று துணை முதலமைச்சர் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

அதேபோல் அமைச்சர்கள் தங்களது பொருப்பு மாவட்டங்களில் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க ரூ.2000 கோடி நிவாரணத்தை தமிழ்நாட்டிற்கு வழக்க ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தை காக்கும் கடவுளாக முதலமைச்சர் இருக்கிறார்.

சேலத்திற்கும் சென்னைக்கும் மட்டும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி தலைவர் சாத்தனூர் அணை திறப்பு குறித்து பேசுகிறார். அரசியலில் கள ஆய்வு கூட்டத்தைக்கூட நடத்த முடியாத எடப்பாடி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால்தான் அதிக பாதிப்பு என கூறி குந்தகம் விளைவிக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்ததால் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

சாத்தனூர் அணையைப் பொறுத்தவரை முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, 5 முறை எச்சரிக்கப்பட்டு பின்னரே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இறுதியாக 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீரை முன்னறிவிப்பு செய்துதான் வெளியேற்றினோம். அதனால்தான் எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்திருந்தால் உயிர்சேதம் இன்றி எடுத்த நடவடிக்கைக்காகத் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, வஞ்சக எண்ணத்தோடு குறை சொல்லி வருகிறார்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: பழனிசாமிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் பொய் அறிக்கையை வெளியிடுகிறார்- அமைச்சர் ராஜேந்திரன் விமர்சனம்!