Tamilnadu

ஃபெஞ்சல் புயல் நிவாரணம் அறிவிப்பு : விண்ணப்பப்படிவம் வெளியீடு - விண்ணப்பிக்க என்னென்ன தேவை ?

தமிழ்நாட்டில் கடந்த நவ.30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.

இதுவரை இல்லாத அளவுக்கு வட மாவட்டங்களில் கடும் மழை ஏற்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு மேற்கொண்டதால் பெருமளவு சேதத்தில் இருந்து மாவட்டங்கள் தப்பித்தது. எனினும் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

மேலும் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. மழை சேதாரங்களை தமிழ்நாடு அரசு சரி செய்ய முயன்று வருகின்றது.

மேலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் களத்தில் இறங்கியுள்ளனர். தொடர்ந்து நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

=> அதன்படி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில்,

* புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 இலட்சம் ரூபாய்;

* சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 ஆயிரம்;

* முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை,

* மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம்;

* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/;

* மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/;

* எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-ஆக வழங்கிடவும்;

* வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/;

- உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

=> மேலும் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில்,

* 2 நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கு கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான விண்ணப்பப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படிவத்தில் எவ்வளவு ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளது என்பது குறித்து விவசாயிகள் பூர்த்தி செய்து, விவசாயிகளின் சிட்டா, ஆதார் அடையாள அட்டை நகல், வங்கி புத்தக நகல் உள்ளிட்டவற்றையும் இணைத்து வேளாண்மை துறை உதவி இயக்குநரிடம் வழங்க வேண்டும்.

Also Read: “தமிழ்நாடு தண்ணீரில் தத்தளிக்கும் போது திரைப்படம் பார்க்கிறார் பிரதமர் மோடி!” : மாணிக்கம் தாகூர் கண்டனம்!