Tamilnadu

ஃபெஞ்சல் புயல் : அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு - அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

ஃபெஞ்சல் புயல் - தமிழ்நாடு அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று (1.12.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரமணாக தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி, இன்று (1.12.2024) வட சென்னை கொளத்தூர் பகுதிகளில் மழைநீர் வடியும் பணிகளை பார்வையிட்ட பின்னர், தமிழ்நாடு அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று (30.11.2024) மாலை 5.30 முதல் இரவு 11.30 வரை காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடந்தது.

இதன் காரணமாக, இன்று (1.12.2024) காலை 8.30 மணி வரை சராசரியாக விழுப்புரம் மாவட்டத்தில் 22.8 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டத்தில் 12.00 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.3 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 47.7 செ.மீ., நெமிலியில் 45.7 செ.மீ. ஆத்தூரில் 29 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம், ஊசூரில் 25 செ.மீ., கடலூர் மாவட்டம், காளையூரில் 21 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்திற்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்திட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், வனத்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி அவர்களுடன் இணைந்து செயல்பட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கடலூர் மாவட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் அவர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கிடவும், பணிகளை துரிதப்படுத்தவும் நீர் வள் ஆதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான், இ.ஆ.ப., பேரூராட்சிகள் துறை இயக்குநர் கிரன் குராலா இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசு இ.ஆ.ப., ஆகியோரை அனுப்பி வைக்க முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்.

ஏற்கனவே மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து துறை ஆணையருமான S.J. சுன்சோங்கம் ஜடக் சிரு இ,ஆ,ப., அவர்கள் மூன்று நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை கண்காணித்து வருகிறார்.

கடலூர் மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர், எஸ்.எ. ராமன், இ.ஆ.ப., அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேற்கண்ட பணிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களிடம் இன்று (1.12.2024) மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொலி காட்சி வாயிலாக தொடர்புகொண்டு, மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

=> நிவாரண முகாம்கள் :

167 நிவாரண முகாம்களில் மொத்தம் 6022 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் செய்துதர முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

=> மீட்புப் படை :

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 14 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடலூருக்கு 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மின் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள, 70 குழுக்களும் மின்சாரம் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மின் தடை ஏற்பட்டுள்ள இடங்களில் மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சென்றிருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அதற்கு தேவையான தேவையான மோட்டார் பம்பு செட்டுகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான உணவு, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Also Read: “எங்களையும் சங்கியாக்க முயல்கிறார் சீமான்” - நெல்லை மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!