Tamilnadu
ஆயுதத்தால் கொடூரமாக தாக்கப்பட்ட பாஜக நிர்வாகி : திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் அதிரடி கைது !
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன். இவர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய தலைவர் பொறுப்பில் இருந்தவர். இந்த சூழலில் இவர் வழக்கம்போல் கடந்த மே 8-ம் தேதி இரவு தனது வீட்டில் இருக்கும்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் மதுசூதனனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட மதுசூதனனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
அதாவது மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் மதுசூதனன் இடையே இது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனால் மதுசூதனன் பாஜக குறித்து சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக பாஸ்கர் உத்தரவின்பேரில், பாஜக பொதுச்செயலாளர் செந்திலரசன் என்பவர் கூலிப்படையை ஏவி, மதுசூதனனை வெட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாஜக மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் ஜெகதீசன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த போலிஸார் குடவாசல் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!