
தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில் சேவைகள் மேற்கொள்வது தொடர்பாக, கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளருமான திரு.தயாநிதி மாறன் எம்.பி. வைத்திருந்த கோரிக்கை மீது மேல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது.
விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில், பயணிகளின் இன்னல்களை போக்கும் வகையில் ரயில் சேவைகளை மேம்படுத்த வலியுறுத்தி, கடந்த 17.09.2026 அன்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில், சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு ஏராளமான பயணிகள் பயணிக்கும்போது மிகவும் சிரமமான சூழலை சந்திக்க நேரிடுகிறது என்று தயாநிதி மாறன் எம்.பி குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் கடைசி நேர மற்றும் குறைந்த பயண கட்டண தேர்வாக ரயில் சேவையை நாடுகின்றனர் என்றும், எனினும், குறைவான சேவைகளாலும் போதுமான ரயில் பெட்டி வசதிகள் இல்லாததாலும் கடும் சிரமங்கள் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படைப் பிரச்சனை, பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வசதிகள் அல்லது அதிக எண்ணிக்கையிலான ரயில் பெட்டிகள் இல்லாததே ஆகும். எனவே தொடர் விடுமுறைகள், பண்டிகை காலங்கள் மற்றும் பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கக்கூடிய மற்ற நாட்களிலும் தமிழ்நாட்டில் திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய முக்கிய வழித்தடங்கள் மற்றும் அதிக தேவை உள்ள வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில் தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்திருந்தார்.
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் கடந்தகாலத் தேவையின் அடிப்படையில், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். செயல்பாட்டு ரீதியாகச் சாத்தியமான இடங்களில், அதிக பயன்பாட்டில் உள்ள வழித்தடங்களில் இயங்கும் பொருத்தமான ரயில்களில் குறைந்தது 10 முன்பதிவுசெய்யப்படாத பெட்டிகளை இணைக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் பெட்டிகளிலும் மூடியகதவு அமைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் தயாநிதி மாறன் எம்.பி. கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இக்கடிதத்திற்கு பதிலளித்துள்ள ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில் சேவைகள் தொடர்பான, 17.09.2026 தேதியிட்ட உங்கள் கடிதம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீங்கள் எழுப்பிய விவகாரம் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசீலனைக்குப் பிறகு, இதுதொடர்பாகத் தேவையான மேல்நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.






