தமிழ்நாடு

“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!

ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களில் அவர்கள் மாற்றியது என்ன? ஒன்றுமே இல்லை. காலையில் மின்வெட்டு, மாலையில் மின்வெட்டு என மக்கள் தினமும் மின்வெட்டால் அவதிப்படுகிறார்கள்.

“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வாக்குச் சேகரித்தார்.

அப்போது பேசிய கனிமொழி எம்.பி, "நீங்கள் மக்களைச் சந்திக்கும்போது அதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த ஆட்சி வந்தால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும், இதற்கு முன்பு எதுவுமே சரியாக நடைபெறவில்லை என்றும் வாக்குறுதி அளித்தனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தையும் ஒரே நாளில் மாற்றிக் காட்டுவோம். அதிலும் திரைப்படங்களில் காட்டுவது போலப் பேசி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களில் அவர்கள் மாற்றியது என்ன? ஒன்றுமே இல்லை. காலையில் மின்வெட்டு, மாலையில் மின்வெட்டு என மக்கள் தினமும் மின்வெட்டால் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக, மாலை நேரங்களில் பலமுறை மின்வெட்டு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம் சென்று அவர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை பற்றி கேளுங்கள். முந்தைய திமுக ஆட்சியில் இதுபோல் தினமும் மின்வெட்டு ஏற்பட்டதா என்று அவர்களிடமே கேளுங்கள்.

இப்போது வெளியே வந்து மின்வெட்டு ஏற்பட்டால்கூட, வீட்டில் இருக்கும் சகோதரிகள் வெளியே வந்து உட்காருவதற்குப் பயப்படுகிறார்கள். ஏனென்றால், இந்த தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய முதலமைச்சர், என்னுடைய அன்புத் தம்பி விஜய். ஏனென்றால் இப்போது அவர் சொந்தக்காரராகிவிட்டார். எங்கள் அண்ணன் ஸ்டாலினை ஸ்வீட் அங்கிள் என்று அழைக்கிறார்; அதனால் அவரை அன்புத் தம்பி விஜய் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

அதனால், தம்பி விஜயின் ஆட்சியில் பெண்கள் மின்வெட்டு ஏற்படும் நேரத்தில்கூட வீட்டிற்கு வெளியே வந்து உட்காருவதற்குப் பயப்படுகிறார்கள். சொல்லப்போனால் இருட்டாக இருந்தாலும், காற்றில்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்துவிடலாம்; வெளியே வந்தால் ஆபத்து என்று நினைக்கக்கூடிய அளவுக்கு சட்டம் ஒழுங்கு குறித்த அச்சம் உருவாகியுள்ளது. தவெக ஆட்சி அமைத்து நான்கு மாதங்களிலேயே கிட்டத்தட்ட 550 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் தொடர்ந்து இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சாதனை என்னவென்றால், நம்முடைய அண்ணன் மு.க.ஸ்டாலின் சொல்வதைப் போல, மின்வெட்டுக்கும் அருவா வெட்டுக்கும் மட்டும்தான் போட்டி; வேறு எதற்கும் இங்கு போட்டியே இல்லை

அதனால்தான், இந்த நான்கு மாத ஆட்சியில் கிட்டத்தட்ட 550 குற்றச் சம்பவங்கள், 200க்கும் மேற்பட்ட கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 300க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள், 8 காவல் மரணங்கள், 10க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவல்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் யார், முதலமைச்சரான அன்புத் தம்பி விஜய்தானே. இதுதான் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வந்திருக்கக்கூடிய மாற்றமா?

இப்படிப்பட்ட சூழலில், மக்களின் வாழ்வாதாரத்திற்கான 100 நாள் வேலைத் திட்டத்தின் நிலை என்ன எழாது பற்றி இதுவரை பேசவில்லை. இப்போது யாருக்காவது 100 நாள் வேலை முறையாகக் கிடைக்கவில்லை. ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தைப் பாதிக்கும் வகையில் புதிய திட்டத்தையும் சட்டத்தையும் கொண்டு வர முயற்சிக்கிறது. அதற்கு எதிராக பிரதமரையும், ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவையும் எதிர்த்து, பாஜக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் எதிர்த்து குரல் கொடுத்தது திமுகதான்.

ஆனால், இங்கே ஆட்சிப் பொறுப்பில் இருக் அன்புத்தம்பி விஜய், இந்தப் பிரச்சினைக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 100 நாள் வேலைத் திட்டப் பணிகளில் 20 சதவீதத்துக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களிலேயே, தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய 100 நாள் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன; அதோடு, பணியாற்றியவர்களுக்கான ஊதியமும் முறையாகக் கிடைக்கவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.

இதையெல்லாம் எதிர்த்து, நான்தான் பெரிய போராளி என்று சினிமா வசனங்களை ரீல்ஸுக்காகப் பேசிக்கொண்டிருக்கிற முதலமைச்சர் தம்பி விஜய், ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா என தேடுகிறேன். தம்பி விஜய் மதுராந்தகம் கூட்டத்தில் வந்து, தமிழ்நாட்டின் பாஜக திமுக என்று பேசுகிறார். ஆனால், 100 நாள் வேலைத் திட்டத்தைப் பாதிக்கும் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். என் மக்களை நான் பாதுகாப்பேன் என்று உறுதியாகச் சொன்னவர் நம்முடைய முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின். ஆனால், இன்றைக்கு இந்தப் பிரச்சினைக்காக தம்பி விஜய் ஏதாவது ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார்

நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் தொடர்பாக மிகப்பெரிய விவாதம் எழுந்திருக்கிறது. மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் செயல்படும் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து, மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த பத்து மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது, நீக்குவது, மீண்டும் சேர்ப்பது உள்ளிட்ட விவகாரங்களிலும் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நம்முடைய தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால், தம்பி விஜய் இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா?

தேர்தல் ஆணையம் என்பது நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்கான அரசியலமைப்பின் அங்கம். ஆனால், தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, வாக்காளர் பெயர்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடு முழுவதும் விவாதமும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதுவரை 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியல்களில் 13 கோடிக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபடக்கூடாது என்பதே நம்முடைய கவலை.

இப்படிப்பட்ட சூழலில், மக்களின் வாக்குரிமை தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினை குறித்து நாடே விவாதித்துக்கொண்டிருக்கும்போது, முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்ளும் தம்பி விஜய் இதுகுறித்து ஏதாவது ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா என்பதுதான் மக்களிடம் நாம் கேட்க வேண்டிய கேள்வி.

“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!

சட்டமன்றத்தில் விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு , சட்டமன்றத்தில் பிரதமர் மோடி குறித்து விமர்சித்து பேசுவதற்காக எழுந்தபோது, அந்தப் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று அவசரமாகச் சொல்லி, அதைப் பற்றியெல்லாம் பேசாதீங்க, இங்கே பேசாதீங்க என்று தடுத்தது யார். அவரை தடுத்தது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா இல்லை, ஜோசப் விஜயா என மக்களுக்கு தெரியும்

அடிப்படையில் எந்த இடமாக இருந்தாலும் கொஞ்சம் அடக்கம் தேவை. நீங்கள் எந்த இடத்தில் போய் உட்கார்ந்தாலும் அடக்கம் இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் நீங்களே, கருணாநிதியின் பெயரைச் சொன்னதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். ஒருவருடைய பெயரைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது.உண்மையில் பெயர் என்பது அவரை அழைப்பதற்காகத்தானே வைக்கப்படுகிறது.

என்னுடைய பெயர் என்ன என்று கேட்டால், கனிமொழி கருணாநிதி என்றுதான் நான் சொல்வேன். உங்கள் அப்பாவின் பெயர் என்ன என்று கேட்டாலும், கருணாநிதி என்றுதான் சொல்வேன். தலைவர் கலைஞரே தொலைபேசியில் பேசும்போது, நான் கருணாநிதி பேசுகிறேன் என்றுதான் அறிமுகப்படுத்திக்கொள்வார்; கலைஞர் பேசுகிறேன் என்று அவர் சொல்வதை நான் கேட்டதில்லை. ஒருவருடைய பெயரைச் சொல்வதால் மட்டும் மரியாதை குறைந்துவிடாது; மரியாதை என்பது அவருடைய பண்பிலும் தன்னடக்கத்திலும் இருக்கிறது.

அந்த வகையில், என் பெயரைச் சொல்லக்கூடாது என்று நினைக்காமல், தன்னுடைய பெயரைச் சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தவர் தலைவர் கலைஞர். அந்தத் தன்னடக்கம்தான் அவருடைய பெருமை.

நீங்கள் சட்டமன்றத்தில் பேசும்போது, அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அடுத்து விஜய் என்று மூவரையும் ஒரே வரிசையில் குறிப்பிட்டுப் பேசுகிறீர்கள். பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்திற்குச் சென்று முதன்முறையாகப் பேசும்போது, I come from the Dravidian stock என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் தலைநிமிர்ந்து தனது திராவிட இயக்க அடையாளத்தை உலகறியச் சொன்ன தலைவர். அதேபோல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உங்களைப் போல இரண்டே ஆண்டுகளில் அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து அரசியலில் குதித்தவர் கிடையாது. காங்கிரஸ் பேரியக்கத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, பின்னர் திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர. அதுமட்டுமல்ல தலைவர் கலைஞரைத் தனது தலைவராக ஏற்றுக்கொண்டு நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொண்டவர். ஏழை, எளிய மக்களுக்காக ஆட்சியை நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

இப்படிப்பட்ட இரு தலைவர்களின் பெயர்களோடு உங்களுடைய பெயரையும் சேர்த்துப் பேசுகிறீர்களே, தம்பி விஜய். தேர்தலுக்கு முன்பு அடிக்கடி, ஊரான் வீட்டு நெய்யை எடுத்து ஸ்வீட் செய்யலாமா என்று கேட்டுவிட்டு, இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என கைவிரித்துவிட்டார். அதற்கு காரணமாக பணம் இல்லை, கஜானாவை காலி பண்ணிவிட்டுப் போய்விட்டார்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றி உள்ளீர்களா. தேர்தலுக்கு முன்பு ஆறு சிலிண்டர் என்று சொன்னது இப்போது மூன்று சிலிண்டராகிவிட்டது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதி, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக வழங்கப்படும் என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறிய முதல்வர் இன்று அவர்களுக்கு எதிராக பல்வேறு நிபந்தனைகள் விதித்து வருகிறார்.

மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்தவரை, முன்பு 200 ரூபாய் வந்த இடங்களில் இப்போது 2,000 ரூபாய் வரை கட்டணம் அதிகரித்துள்ளது. சில இடங்களில் 20,000 ரூபாய் வரை கூட மின்கட்டணம் வந்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதைப் பற்றி கேட்டால் மீண்டும் அதே பதில்தான் அரசாங்கத்திடம் பணம் இல்லை, பணம் இல்லை என்று சொல்கிறீர்கள். தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளுக்கும், ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லப்படும் காரணங்களுக்கும் இடையிலான இந்த வித்தியாசத்தைத்தான் மக்கள் இப்போது கேள்வி கேட்கிறார்கள்.

காமராஜர், பேரறிஞர் அண்ணா, நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அம்மையார் ஜெயலலிதா, அதற்கு முன்பாக தலைவர் கலைஞர் எனப் பல தலைவர்கள் பயன்படுத்திய அலுவலகத்தை இன்று மாற்றியுள்ளேர்கள். அதற்காக ரூ.7 கோடி செலவு செய்கிறீர்கள். அதுவும் முறையான டெண்டர் இல்லாமல் இந்தச் செலவு ஏன் செய்யப்பட்டது. கஜானாவில் பணம் இல்லை என்று சொல்லும் உங்களுக்கு, இந்த 7 கோடி ரூபாய் மட்டும் எங்கிருந்து வந்தது. நீங்கள் இப்போது அடுத்த வீட்டுக் காசை எடுத்து காராபூந்தி சுடுகிறீர்களா என கேட்கத் தோன்றுகிறது.

அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் கட்டிய சட்டமன்றக் கட்டிடம் இருக்கும்போது, 1,200 ரூபாய் கோடி செலவில் புதிதாக ஒரு சட்டமன்றக் கட்டிடம் கட்டப் போவதாகச் சொல்கிறீர்கள். அதற்கு எதிராக அங்கு வாழும் மீனவ மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருபுறம் காசு இல்லை, கஜானா காலி என்று சொல்கிறீர்கள்; மறுபுறம் ஆயிரம் கோடிகளில் புதிய கட்டிடத் திட்டம். இதுதான் நீங்கள் சொன்ன மக்களுக்கான மாற்றமா என விளக்க வேண்டும்.

விலைவாசியை எடுத்துக்கொண்டால் திமுக ஆட்சிக் காலங்களில் வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், முதலீடுகளை ஈர்ப்பது எனப் பல துறைகளில் தமிழ்நாடு தேசிய சராசரியை விட முன்னிலையில் இருந்தது. ஆனால், இன்றைக்கு தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பது எதில் என்றால் விலைவாசி உயர்வில்தான் என்று மக்கள் கேட்கிறார்கள். தேசிய அளவில் விலைவாசி உயர்வு 4.4 சதவீதம் என்ற நிலையில், தமிழ்நாட்டில் அது 5.44 சதவீதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்பு 50 ரூபாய்க்கு கிடைத்த அரிசி இன்று 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது; இட்லி அரிசியின் விலையும் இரட்டிப்பாகியுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது.

அதனால், இங்கிருக்கிற சகோதரிகள் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் சுற்றுவட்டார மக்களிடம் உட்கார்ந்து பேசுங்கள். ஃபியூஸ் யாரு புடுங்கிட்டு போறாங்கன்னு கூட கண்டுபிடிக்க முடியலையா என்று கேளுங்கள். நான்கு மாதங்களாக இதற்குக்கூட தீர்வு காண முடியாத ஒரு ஆட்சி எதற்காக என கேளுங்கள். நம்முடைய முன்னாள் அமைச்சர் அண்ணன் நேரு இங்கேதான் இருக்கிறார். அவருடைய துறையிலேயே யாராவது தொடர்ந்து ஃபியூஸ் புடுங்கிக்கொண்டிருந்தால், அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டாமா, இதைக்கூட செய்ய முடியாமல் நான்கு மாதங்களாக எதற்காக ஆட்சி நடத்துகிறார்கள்.

ஃபியூஸ் புடுங்கிட்டுப் போறாங்க, பள்ளம் வெட்டுறாங்க, காத்து அடிக்கல, மழை வரல, தண்ணி வரல என்று எதற்கெடுத்தாலும் காரணங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லா ஆட்சிக் காலத்திலும் சில நாட்கள் காற்று இல்லாமல் இருக்கலாம், மழை இல்லாமல் இருக்கலாம். இதெல்லாம் அடிப்படை அறிவியல் வேண்டும், கொஞ்சமாவது படித்தால் தெரிந்திருக்கும். அதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும். ஆனால், எதைப் பற்றிக் கேட்டாலும் திரும்பத் திரும்ப தூய சக்தி, தீய சக்தி என்ற ஒரே வசனத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை தீர்ந்து போன சக்தி என விமர்ச்சித்துவிட்டு அந்தத் தீர்ந்து போன சக்தியிலிருந்துதானே இப்போது ஒருவரை அழைத்து வந்து தேர்தலில் நிறுத்தியிருக்கிறீர்கள்.

தூய சக்தி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், 50 கோடி கொடுத்து ஒருவரைத் தூக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதையும் விளக்க வேண்டும். அதேபோல, உங்கள் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பற்றி, அரசு வழக்கறிஞர் பதவி வழங்குவதற்காக ரூ.30 லட்சம் பெற்றதாக ஒரு பெண் வழக்கறிஞர் புகார் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் புகாரை அளித்த பெண் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்; அவர் முன்வைத்த குற்றச்சாட்டின் மீது என்ன விசாரணை நடத்தப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் என்ன விளக்கம் கேட்கப்பட்டது. அந்தப் புகாரின் உண்மை நிலை என்ன என்பதற்கு வெளிப்படையான பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஆட்சியினருக்கு இருக்கிறது. தூய சக்தி என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதைவிட, மக்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கும் எழும் குற்றச்சாட்டுகளுக்கும் வெளிப்படையாகப் பதில் சொல்வதுதான் முக்கியம். முன்னதாக தொடர்ந்து நான்கு மாதமாக ஒரே கதையையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்; எனக்கே போரடித்துவிட்டது. குறைந்தபட்சம் அந்த ஸ்கிரிப்ட் ரைட்டரையாவது மாற்றுங்கள்.

இதேபோல, ஐபிஎல் போட்டியின்போது ஒரு அமைச்சர் செல்போனைப் பயன்படுத்திக்கொண்டிருந்தது குறித்தும் கேள்விகள் எழுந்தன. அதற்கு, குழந்தைக்கு மருந்து அரைத்துக்கொண்டிருந்தேன் என்று விளக்கம் அளித்ததாகச் சொல்கிறார்கள். சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால், அவர் உண்மையில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் இதுவரை விசாரிக்கவில்லை. பெரிய அளவில் எந்த விசாரணையும் தேவையில்லை; அவர் பயன்படுத்திய சாதனம் அல்லது அதில் இருந்த தகவல்கள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்தாலே உண்மை என்ன என்பது தெரிந்துவிடும். அதற்குக்கூட இந்த தூய சக்தி அரசு முயற்சி செய்யவில்லை என்பதுதான் கேள்வி.

அதே நேரத்தில், அரசியலில் நாகரிகமாகப் பேச வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதற்கு நானும் உடன்படுகிறேன்; அரசியலில் அனைவரும் நாகரிகத்தைக் கடைப்பிடித்துப் பேச வேண்டும். ஆனால், அந்த நாகரிகம் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும். உங்கள் அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோவில், அவருடைய கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆடியோ குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, அரசியலில் ஒருவரை ஒருவர் மதித்து, நாகரிகமாகப் பேச வேண்டும். அதை முதலில் உங்கள் கட்சிக்குள்ளேயே கடைப்பிடிக்க வேண்டும்.

இதுதான் கண்ணியத்தையும் பெண்களின் மரியாதையையும் காப்பாற்றும் என்று சொல்லிக்கொள்ளும் தூய சக்தி. சமூக வலைதளங்களில் திமுகவைச் சேர்ந்த பெண்களைப் பற்றி எப்படிப்பட்ட இழிவான விமர்சனங்களும் அவதூறுகளும் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் தம்பி விஜய் அவர்கள் ஒருமுறையாவது கேள்வி எழுப்பியிருக்கிறாரா. அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறாரா என்றால் ஒன்றுமே இல்லை. ஆனால், தங்களை மட்டும் தூய சக்தி என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அதையும் தாண்டி, என்னுடைய தொகுதியான ஸ்ரீவைகுண்டத்தில் தவெக நிர்வாகியாக இருக்கும் ஒரு பெண், அங்கு உள்ள ஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டு முன்வைத்ததாகவும், அதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பாக அந்தப் பெண் அமைச்சர் மீது குற்றச்சாட்டு முன்வைத்தபோது, அவரை மிரட்டி புகாரைத் திரும்பப் பெறச் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

அதேபோல, தாம்பரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் தவெக நிர்வாகிகள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து கட்சி மற்றும் ஆட்சியினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதுதான் முக்கியமான கேள்வி. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; அவர்களிடம் கேள்வி கேட்கக்கூடாது என்ற நிலை இருக்கக்கூடாது. நீங்கள் வெளியிடும் குற்றச்சாட்டுகளின் பட்டியலில், உங்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்மீதும் புகார்கள் இருக்கின்றன என்றால், அதற்கும் வெளிப்படையான பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!

அதுமட்டுமல்லாமல், அரசு அரசாணைகளைப் பிறப்பித்து பின்னர் அவற்றைத் திரும்பப் பெறுவது தொடர்பாகவும் இந்த ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. தொடர்ந்து அரசாணைகளை வெளியிட்டு, பின்னர் அவற்றைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் ஒரு பொறுப்பான ஆட்சியின் அடையாளம்; தூய சக்தி என்ற பெயரைச் சொல்லிக்கொள்வது மட்டும் போதாது.

இதில் தகவல் அறியும் உரிமைச் சட்டமான RTIயைப் பற்றியும் பேச வேண்டும். இந்தச் சட்டம் 2005-ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் இருக்க வேண்டும்; மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட முக்கியமான சட்டம் இது. ஆனால், இன்று அந்தச் சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்குக்கூட உரிய பதில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. உங்களுடைய ஆட்சியை ஆதரித்து வந்த கம்யூனிஸ்ட் தோழர்கள்கூட இன்று உங்களுடைய செயல்பாடுகளை விமர்சித்து அறிக்கை வெளியிடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதுதான் நீங்கள் சொல்லிக்கொள்ளும் தூய சக்தி ஆட்சி.

அதுமட்டுமல்ல, இந்தப் பகுதியில் ஒரு அமைச்சர் சாயப்பட்டறைகளிடமிருந்து 9 முதல் 10 கோடி வரை வசூல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டதா என்பதுதான் மக்களிடம் நாம் கேட்க வேண்டிய கேள்வி. ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களிலேயே இத்தனை குற்றச்சாட்டுகள் எழும்போது, அவற்றுக்கு வெளிப்படையான பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

இத்தனை கேள்விகள் எழுந்துகொண்டிருக்கும்போது, நம்முடைய தம்பி விஜய் மட்டும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. உண்மையில், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்; நாம்தான் அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவரது கட்சிக் கொடியின் நிறங்களைப் பற்றியும் பல்வேறு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், கொடியின் நிறமே மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணம். அதை சேர்த்தாலே காவி வந்து விடுகிறது.

அதேபோல, குழந்தைகளை அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது குறித்தும் கேள்விகள் எழுகின்றன. குழந்தைகளுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேறு; அவர்களை வைத்து பெற்றோரிடம் வற்புறுத்தி வாக்கு கேட்கச் செய்வது வேறு. இது ஜனநாயக ரீதியாகவும், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலன் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டிய விஷயம். தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் ஒரு வரம்பு இருக்க வேண்டும்.

இந்நிலையில், மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, வண்டலூர் அருகே அரசுப் பள்ளி மாணவி தொடர்பான பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகின. அந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா, பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் குடும்பத்திற்கும் போதுமான பாதுகாப்பும் நீதியும் கிடைத்ததா என்பதுதான் முக்கியமான கேள்வி. ஒரு அரசாங்கத்தின் கடமை, எந்த அரசியல் நிகழ்வாக இருந்தாலும் அதைவிட மக்களின் பாதுகாப்புக்கும் நீதிக்கும் முன்னுரிமை கொடுப்பதுதான்.

அதேபோல, மதுரை அருகே 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திலும், அந்தச் சிறுவனின் குடும்பத்தினர் நீதி கோரி போராடியதாக செய்திகள் வெளியாகின. போராடிய குடும்பத்தினரிடம் காவல்துறை எவ்வாறு நடந்து கொண்டது என்பதும் கேள்விக்குள்ளானது. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதுதான் அரசின் முதன்மையான பொறுப்பு. குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளில் அரசியல் கணக்குகளைவிட அவர்களின் பாதுகாப்பும் உரிமைகளும் முக்கியம்.

அதனால், திரைப்படங்களில் கதாநாயகர்கள் தாய்மாமன் சீர் கொடுப்பது போன்ற காட்சிகளைப் பார்க்கலாம். இன்று தாய்மாமன் சீர் என்ற பெயரில் மோதிரம் கொடுப்பது பற்றியும் பேசலாம். நீங்கள் கொடுப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், பெண்கள் யாருடைய சீர் அல்லது உதவியை எதிர்பார்த்து நிற்க வேண்டிய அவசியமே இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படைச் சிந்தனை.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் சமூகச் சீர்திருத்தப் பயணமும், தொடர்ந்து முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் செயல்படுத்தி வரும் பெண்களுக்கான திட்டங்களும், பெண்கள் தங்களுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் முதல், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பெண்களின் பொருளாதார முன்னேற்றம் எனப் பல்வேறு வழிகளில் பெண்கள் யாரிடமும் கையேந்தாமல் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதே அந்தப் பயணத்தின் நோக்கம்.

அந்தப் பாதையில், இன்று படித்த ஒரு பெண்ணையும், வழக்கறிஞருமான சுகன்யாவையும் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அவர் இன்னும் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, மக்களுடைய பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார். ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தான் வாக்களித்தால் மட்டுமே திட்டங்கள் கிடைக்கும் என்று சிலர் சொல்லலாம். ஆனால், மக்களின் உரிமைகள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் கிடைக்க வேண்டியவை. இப்போது மக்களுக்காகப் பணியாற்றும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம்.

இதேபோல, விவசாயிகளும் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். குழாய்கள் பதிப்பது உள்ளிட்ட பணிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். வெறும் பச்சைத் துண்டைப் போட்டுக்கொள்வதால் மட்டும் ஒருவர் விவசாயியாகிவிட முடியாது; விவசாயிகளின் பிரச்சினைகளில் நின்று, அவர்களுக்கான நியாயத்தைப் பெற்றுத்தரும்போதுதான் அது உண்மையான விவசாயி மீதான அக்கறையாகும்.

சினிமாவைப் பார்த்து ஏமாந்த காலம் முடிந்துவிட்டது. மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். யார் என்ன சொல்கிறார்கள் என்பதைக் காட்டிலும், யார் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து முடிவு செய்யும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்"என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories