Tamilnadu
“JNU-வைப் போல இந்தியாவும் பாஜக-வை தூக்கி எறியும் !” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஆண்டுதோறும் மாணவர் பேரவை தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு தேர்தல் நடைபெறாமல் இருந்துள்ளது. நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு, கடந்த 22 ஆம் தேதி மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரி மாணவர் அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம் (SFI), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF) உள்ளிட்ட அமைப்புகளும், பாஜகவின் வலதுசாரி மாணவர் அமைப்பான ABVP போன்ற அமைப்புகளும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு போட்டிகள் நடைபெற்ற நிலையில், நேற்றைய முன்தினம் (24.03.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் இடதுசாரி மாணவர் அணிகள் மகத்தான வெற்றியை பெற்றது. இதில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தனஞ்சய் பாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இடதுசாரி அமைப்புகளிடம் வழக்கம்போல் பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP மண்ணை கவ்விய நிலையில், மாணவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். மேலும் இடதுசாரி மாணவ அமைப்புகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த மாணவர் தேர்தல் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முன்னோட்டமாக பாராக்கப்படுகிறது.
நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “JNU மாணவர் சங்கத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஐக்கிய இடதுசாரி மாணவ அமைப்புகளுக்கு வாழ்த்துகள். பாஜக செய்த வன்முறை மற்றும் வெட்கக்கேடான அத்துமீறல்கள் இருந்தபோதிலும் வலதுசாரி ABVP அமைப்பு, இடதுசாரி மாணவ அமைப்புகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ABVP-க்கு எதிரான வெற்றி முற்போக்கு மாணவர் சமூகத்தின், முக்கியமாக செழுமையான மதச்சார்பற்ற மரபுகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளைக் கொண்ட இளைஞர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. JNU-வைப் போலவே, இந்தியாவும் ஜூன் 4-ம் தேதி பாஜகவை குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!