Tamilnadu
“டெண்டர் விடப்பட்டதா? சாலை அமைக்கப்பட்டதா?” : அதிமுக ஆட்சியில் நடந்த சாலை முறைகேடு - நீதிமன்றம் கண்டனம்!
மதுரையைச் சேர்ந்த பாண்டி, என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மதுரை மாநகராட்சி காண்டிராக்டராக உள்ளேன். கடந்த 2016-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சியின் பொன் நகர் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க டெண்டர் விட்டனர். இந்த பணியை நடத்த தேர்வானேன். மதுரை மாநகராட்சி கமிஷனரின் உத்தரவுக்காக காத்திருந்த நிலையில், சட்டசபை தேர்தல் பணியில் அவர் இருந்ததால், துணை மேயர் திரவியமும், உதவி என்ஜினீயரும் அந்த பணியை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டனர்.
அதன்பேரில் நானும் பேவர் பிளாக் சாலைப்பணிகளை முடித்தேன். ஆனால் இதுவரை அதற்கான தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். பேவர் பிளாக் சாலை அமைத்ததற்கான தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரர் இதற்கு முன்பாக செய்த பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அதனால் அதை நிறைவேற்றாததால், சாலை பணிக்கான தொகை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரர் ஒப்புக்கொண்ட பேவர் பிளாக் சாலை பணியை அவர் முடித்துவிட்டதாக துணை மேயர் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், மாநகராட்சி சார்பில் இந்த பணிக்கான உத்தரவு வழங்கப்படவில்லை என்று ஒருபுறமும், 2012-ம் ஆண்டில் மனுதாரருக்கு வழங்கிய பணியை முறையாக செய்யாததால் அவருக்கு இந்த பணிக்கான தொகை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு பின்பு சாலை அமைக்க அறிவுறுத்தியதாக மனுதாரர் தெரிவிக்கிறார். எனவே தேர்தல் அறிவிப்புக்கு பின்பு டெண்டர் வழங்கப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எனவே இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிப்பதுதான் சரியானது என இந்த நீதிமன்றம் விரும்புகிறது. அதன்படி இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் 3 மாதத்தில் விசாரித்து இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!