Tamilnadu

'சார் இதுதான் எனது ஆசை'.. உடனே நிறைவேற்றிய திருப்பத்தூர் ஆட்சியர்: கண்கலங்கிய 10ம் வகுப்பு மாணவி!

திருப்பத்தூர் மாவட்டம், பாச்சல் கிராமம் இதயம் நகர் பகுதியில் நரிக்குறவர்யின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இதையடுத்து 53 நரிக்குறவர்யின மக்களுக்குப் பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் அவருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு நரிக்குறவர்யின மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் பத்தாம் வகுப்பு படிக்கும் மெய்வழி என்ற மாணவி கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியரிடம், 'சார் நானும் மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை' என தெரிவித்துள்ளார்.

உடனே மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன், மாணவி மெய்வழியை ஆட்சியர் இருக்கையில் அமரவைத்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மாணவி ஆட்சியரின் செயலை கண்டு கண்கலங்கினார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

Also Read: ”தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த கலைஞரின் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறக்கட்டும்”.. முரசொலி!