Tamilnadu

பூதாகரமாகும் கலாஷேத்ரா விவகாரம்.. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பரபரப்பு கடிதம்!

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ’கேர் ஸ்பேஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசியபோதுதான் இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது.

இது பற்றி அறிந்த உடன் கலாஷேத்ரா நிறுவனம் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தியது. ஆனால் "பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், தங்களது அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது" என்று கூறி விசாரணைக் குழுவை முடித்துள்ளது.

இதற்கிடையில் கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், "10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்திக்கின்றனர்" என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பதிவை அவர் உடனே நீக்கியுள்ளார்.

இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம், டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கலாஷேத்ரா நிறுவனத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாணவர்களின் புகாரின் மீது முக்கியத்துவம் கருதாமல் நடந்து கொண்டுள்ளதாக கலாஷேத்ரா சேர்மன் ராமதுரைக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள அந்த கடிதத்தில், "மாணவர்கள் மீது அக்கறையும் கருணையும் இருந்தால் ஒழிய எந்தவொரு விசாரணையும் பயனுள்ளதாக இருக்கும். கலை தாகத்தோடு பலரும் இங்கு வருகிறார்கள். பலரும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

கலாஷேத்ரா மீது மதிப்பை வைத்துள்ள எல்லோரும் குரல் கொடுப்போம். மாணவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். டி.எம்.கிருஷ்ணாவின் இந்த கடிதத்தை அடித்து கலாஷேத்ரா விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

Also Read: ’பப்பு’ என்று சொன்ன ராகுல் காந்தியை பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!