Tamilnadu

நகைகள் மாயமான வழக்கில் திருப்பம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த போலிஸ் திட்டம்: காரணம் என்ன?

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அண்மையில் கொடுத்திருந்தார். அதில், தனது வீட்டின் லாக்கரில் இருந்த தங்க, வைர நகைகள், நவரத்தின கற்கள் ஆகியவற்றைக் காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும், 2019-ம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்குப் பின்பு 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 சவரன் தங்க, வைர நகைகளை லாக்கரில் வைத்திருந்ததாகவும், தான் லாக்கரில் நகைகளை வைத்திருந்தது, தனது வீட்டில் வேலை பார்த்து வரும் பணிப்பெண்கள் ஈஸ்வரி, லட்சுமி மற்றும் கார் ஒட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீட்டில் வேலைபார்த்து வந்த ஈஸ்வரி என்ற பெண்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இங்குத் திருடிய நகைகளை வைத்து அவருக்கு சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கியுள்ளதையும் போலிஸார் கண்டு பிடித்தனர்.

மேலும் 2019-ம் முதலே லாக்கரில் இருந்த நகைகளை சிறுகச் சிறுக திருடி வந்த ஈஸ்வரி, அந்த மொத்த நகைகளையும் விற்று தனது கணவர் அங்கமுத்துவின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளார். மேலும் அந்த பணத்தை வைத்து சொகுசு வீடும் வாங்கியுள்ளார். அதோடு அவருக்கு என்று நகைகளை வாங்கியதோடு, கொஞ்சப் பணத்தை ரொக்கமாகவும் வைத்திருந்துள்ளார்.

அதோடு, நான் ஐஸ்வரியா ரஜினிநாந்தின் பினாமி என்றும் அதனால் எனது பெயரில் அவர் வீடு வாங்கியுள்ளார் என அவரது கணவரை நம்பவைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் 60 சவரன் நகையைக் காணவில்லை என புகார் கூறிய நிலையில் போலிஸார் 100 சவரன் நகையை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போலிஸார் நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Also Read: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு LOCKERல் இருந்து தங்க, வைர நகைகள் மாயம்: பணிப்பெண் அதிரடி கைது -என்ன நடந்தது?