Tamilnadu

ஆன்லைன் விளையாட்டால் தொடரும் பலிகள்.. பணத்தை இழந்ததால் திருச்சியில் மருத்துவமனை ஊழியர் தற்கொலை!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான ரவிசங்கர் இந்த விளையாட்டில் அதிகப் பணத்தை இழந்துள்ளார். இதனால் அவருக்கு கடன் சுமையும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்த வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ரவி சங்கர் அதிக அளவு தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று வழக்கம் போல் காலை ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி அவரை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரவி சங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரவி சங்கர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படும் உயிர் பலிகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.. ஏக்கத்தில் விபரீத முடிவெடுத்த மருத்துவர்!