Tamilnadu
“உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண செயலாற்றுவோம்” -நடிகர் கார்த்தியின் பாராட்டுக்கு முதலமைச்சர் பதில் !
தமிழ்நாட்டின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் கூட்டத்தொடரில் பட்ஜெட்களும், இரண்டாம் நாள் கூட்டத்தொடரில் வேளாண் பட்ஜெட்டும் நடைபெற்றது.
இதில் இரண்டாம் நாள் நடைபெற்ற வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாட்டு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது விவசாயிகளுக்கு பயனுள்ளவற்றை பட்ஜெட்டில் அறிவித்தார்.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறு தானிய இயக்கம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், அங்கக வேளாண்மை (Organic Farming) ஊக்குவிப்பு, சிறந்த அங்கக விவசாயிக்கான " நம்மாழ்வார் விருது", வேளாண் காடுகள் மூலம் பசுமைப் போர்வை, ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்குக் கூடுதலாக 20 சதவிகித மானியம், மின்னணு வேளாண்மைத் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம், எண்ணெய் வித்துக்கான சிறப்பு திட்டம், எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம், தென்னை வளர்ச்சி மேம்பாடு, பருத்தி இயக்கம், பயிர்க் காப்பீட்டுத் திட்டம், பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்-2.0, சர்க்கரைத் துறை, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம், சர்க்கரை ஆலைக் கழிவு மண்ணில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல், தொகுப்பு முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி, தக்காளி - வெங்காயம் சீராகக் கிடைக்கச் செய்தல் என அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேளாண் பட்ஜெட்டுக்கு பொதுமக்கள், விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயன்கள் இருக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த பட்ஜெட்டுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் உழவன் அறக்கட்டளை நிறுவனருமான கார்த்தி இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சருக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கும் வணக்கம். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் திட்டமிடலில் இணைத்துக் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவே பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பின் கார்த்தி சிவகுமார், உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம். உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!