Tamilnadu
பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ்.. தலைமறைவாக இருந்த கோவை தமன்னா கைது.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை போலிஸ் !
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் டிப்ளமோ நர்ஸிங் படித்து முடித்துள்ளார். இவர் கோவையில் தங்கி 'பிரண்ட்ஸ் கால் மி தமன்னா' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் பட்டகாத்தி மற்றும் சிகரெட்டு பிடித்துக் கொண்டிருந்த படி, 'எதிரி போட நினைத்தால், அவனைப் போடணும் என்ற பாட்டுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததை அடுத்து போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
முன்னதாக கோவையில் கடந்த மாதம் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சத்திய பாண்டியன், கோகுல் என்ற இரண்டு ரவுடிகள் அடுத்தடுத்த நாளில் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரவுடிகளின் கொலை பின்னணியில் உள்ள கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து 54 ரவுடிகளை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ரவுடிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் சில ரவுடிகள் சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு வன்மம் கக்கியதாக தெரியவந்தது.
இதனால் சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோரை பிடிக்க, போலிஸார் திட்டமிட்டிருந்தனர். தனிப்படை போலீசார் விசாரணையில் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட, முதல் தேடுதல் வேட்டையில் 40க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது அந்த தேடுதலில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட கோவை தமன்னா சிக்கினார்.
தொடர்ந்து தமன்னா குறித்து விசாரிக்கையில் பிரதர்ஸ் என்ற ரவுடி கும்பல் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டு வருவருகின்றனர். இந்த ரவுடி கும்பலுடன் தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதும், இவர் 2021ம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கில் காதலனுடன் கைதாகியது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாகி இருந்த தமன்னாவை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மீண்டும் தமன்னா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ஆயுதங்களுடன் தான் ரீல்ஸ் செய்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது எனவும், தற்போது trending கிற்காக செய்த வீடியோக்கள் எனவும், தற்போது தான் தனது கனவுகளுடன் ஆறு மாதம் கர்ப்பிணியாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தமன்னாவை தனிப்படை போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமன்னாவை தற்போது காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடும் தாதாக்கள் கைது செய்யப்படுவது ரவுடிகளிடம் பீதியினை ஏற்படுத்தியிருக்கின்றன. சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் சமூக வலைதளங்களை நோட்டமிட்டு தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்வதாக தனிப்படை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
சோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்தி வன்மத்தை காக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். கைதான தமன்னா மீது கஞ்சா வழக்கு முன்னதாக பதிவாகி இருக்கின்றன. சமூக வலைதளம் உள்ளிட்டவற்றை நல்ல நோக்கத்திற்கு இன்றி தவறாக பயன்படுத்துவோர் பட்டியலை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மாநகர போலீசார் சேகரித்து நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!